போஸ்டர் செய்தி

ஆப்கானை துவம்சம் செய்த இங்கிலாந்து

Spread the love

மான்செஸ்டர், ஜூன் 19–

உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, ஆப்கானிஸ்தான் அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் 148 ரன்கள் குவித்தார். அவர் 17 சிக்சர்கள் அடித்து புதிய சாதனை படைத்தார்.

மான்செஸ்டரில் நேற்று நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, ஆப்கானிஸ்தானை சந்தித்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணயின் கேப்டன் மோர்கன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து பேர்ஸ்டோவும், ஜேம்ஸ் வின்சும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். அந்த அணி 44 ரன்கள் எடுத்திருந்தபோது வின்ஸ் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜோ ரூட், பேர்ஸ்டோவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி ரன்களை குவித்தனர். 164 ரன்கள் எடுத்திருந்தபோது பேர்ஸ்டோ 90 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 8 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும்.

பின்னர் கேப்டன் மோர்கன் ஜோ ரூட்டுடன் இணைந்தார். ஆரம்பம் முதலே மோர்கன் ரன் வேட்டையை துவங்கினார். ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான், முகமது நபி, முஜீப்ரகுமான் ஆகியோரின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். அடிக்கடி சிக்கர் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்திய மோர்கன், ரஷித்கானின் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை அடித்து தனது 13-வது சதத்தை 57 பந்துகளிலேயே பூர்த்தி செய்தார். அணியின் ஸ்கோர் 353 ரன்களாக உயர்ந்தபோது ஜோ ரூட் 88 ரன்களில் கேட்ச் ஆனார். ரூட்–-மோர்கன் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 189 ரன்கள் திரட்டியது. அதே ஓவரில் மோர்கனும் 148 ரன்களில் வெளியேறினார். அவர் 4 பவுண்டரிகள் மற்றும் 17 சிக்சர்கள் அடித்தார். ஒரு நாள் போட்டியில் மோர்கனின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதன் பிறகு கடைசி இரு ஓவர்களில் மொயீன் அலி 4 சிக்சர் அடித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் குவித்தது. மொயீன் அலி 31 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.

உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு இதே உலக கோப்பையில் வங்காளதேசத்திற்கு எதிராக 6 விக்கெட்டுக்கு 386 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் ஆடத் தொடங்கியது. துவக்க ஆட்டக்காரர் நூர் அலி ஜட்ரன் ‘டக்’ அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்கள் நைப் (37), ரஹ்மத் ஷா (46), அஸ்கர் ஆப்கன் (44) ஆகியோர் ஓரளவு தாக்கு பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியில் அந்த அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 247 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக ஹஸ்மத்துல்லா ஷாகிதி 76 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் இங்கிலாந்து அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மோர்கன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

5-வது லீக் போட்டிகளில் ஆடிய இங்கிலாந்து அணிக்கு இது 4-வது வெற்றியாகும். புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து அணி முதலிடம் பிடித்தது. ஆப்கானிஸ்தானுக்கு இது 5-வது தொடர் தோல்வியாகும்.

மோர்கன் புதிய சாதனை

ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற புதிய சாதனையை மோர்கன் படைத்தார். ஆப்கானுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 17 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் கிறிஸ் கெயில், ரோகித் ஷர்மா மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் அடித்திருந்த 16 சிக்சர் சாதனையை அவர் முறியடித்தார்.

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வீரர்கள் மொத்தம் 25 சிக்சர்களை அடித்துள்ளனர். இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் விளாசிய அணி என்ற தனது முந்தைய உலக சாதனையை இங்கிலாந்து மாற்றி அமைத்தது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் செயின்ட்ஜார்ஜில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 24 சிக்சர்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து கேப்டன் மோர்கன் இந்த உலக கோப்பையில் இதுவரை 5 ஆட்டங்களில் 22 சிக்சர்கள் அடித்திருக்கிறார். இன்னும் 5 சிக்சர் எடுத்தால், ஒரு உலக கோப்பையில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார். இந்த வகையில் 2015-ம் ஆண்டு உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் 26 சிக்சர்கள் எடுத்ததே அதிகபட்சமாக நீடிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *