காபூல், டிச. 25–
ஆப்கானிஸ்தான் நாட்டின் மீது பாகிஸ்தான் ஜெட் விமானங்கள் குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தியதில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பக்திகா மாகாணத்தில் உள்ள ஏராளமான கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது. குறிப்பாக லேமன் உள்ளிட்ட கிராமங்களை இலக்காக கொண்டு நேற்றிரவு ஜெட் விமானங்களில் சென்ற பாகிஸ்தான் ராணுவத்தினர் சரமாரியாக குண்டுமழை பொழிந்தனர்.
இந்த தாக்குதலில் முர்க் பஜார் என்ற கிராமம் முற்றிலும் அழிந்துள்ளதாக தெரிகிறது. பெரும் சேதத்தை ஏற்படுத்திய இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டனர்.
ஏராளமானோரை காணவில்லை என்றும், படுகாயம் அடைந்தவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
பக்திகா மாகாணத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க உள்ளதாக தலிபான் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.மக்களின் நிலங்கள், இறையாண்மை ஆகியவற்றை பாதுகாப்பது தங்களின் கடமை என்றும் பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது.
அதே நேரத்தில் அதிரடி தாக்குதலை பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. எனினும், ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருந்தபடி தங்கள் நாட்டுக்குள் தாக்குதல் நடத்தும் பயங்கரவாத அமைப்பினரை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.