காபூல், ஏப். 30–
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல், மசூதியில் குண்டு வெடித்ததில் 50 பேர் உடல் சிதறி பலியானார்கள். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கலீபா அகா குல் ஜான் மசூதியில், புனித ரமலான் மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று 100க்கும் மேற்பட்டோர் தொழுகை நடத்த வந்திருந்தனர்.
அப்போது, மசூதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில், உடல் சிதறி 50 பேர் பலியானார்கள். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 20க்கும் மேற்பட்டோர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. குண்டுவெடிப்பை தொடர்ந்து, மசூதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குண்டு வெடிப்ப குறித்து அந்த மசூதியின் தலைவர் சையது பாசில் அகா கூறுகையில், நேற்று தொழுகை நடத்த ஏராளமான பேர் வந்திருந்தனர். அவர்களில் மனித வெடிகுண்டு நபரும் மசூதிக்குள் நுழைந்து குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.
குண்டு வெடித்தவுடன் அனைத்து பகுதிகளிலும் கரும்புகை பரவியது. மசூதி முழுவதும் மனித உடல்கள் சிதறிக் கிடந்தன. நான் மட்டும் உயிரோடு இருக்கிறேன். எனது உறவினர்கள் அனைவரும் இறந்து விட்டனர் என்று தெரிவித்தார்.
இந்த குண்டு வெடிப்புக்கு ஐ.நா சபை மற்றும் அமெரிக்கா ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் கடும் கண்டனத்திற்கு உரியது என்றும் கூறியுள்ளன.
ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் நடந்த பெரும்பாலான குண்டு வெடிப்புகள் சிறுபான்மை ஷியா முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியிலேயே நடந்துள்ளன. இந்த நிலையில் நேற்று சன்னி முஸ்லிம்களின் மசூதியில் நடந்திருக்கிறது.
மேலும் ஆப்கானிஸ்தானின் வடக்கு நகரமான மசார்–இ–ஷெரீப் என்னும் இடத்தில் 2 மினி பஸ்களில் குண்டு வெடித்ததன் காரணமாக 9 பேர் பலியானார்கள். இந்த தாக்குதல் அப்பகுதியில் உள்ள ஷியா முஸ்லிம்களை குறி வைத்து நடத்தப்பட்டது. இதேபோல் இங்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஷியா முஸ்லிம்கள் மசூதியில் குண்டு வெடித்ததில் மொத்தம் 12 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமான பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.