செய்திகள்

ஆப்கானிஸ்தான் ஊடக தகவல் பிரிவு தலைவர் தலிபான்களால் சுட்டுக் கொலை

காபூல், ஆக. 7–

ஆப்கானிஸ்தான் அரசின் ஊடக மையத்தின் தலைவர் தாவா கான் மெனாபல் தலிபான் அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளா் ஜபிஹுல்லா முஜாஹித் கூறியதாவது:–

ஆப்கானிஸ்தான் அரசின் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கான ஊடக நடவடிக்கைகளுக்குத் தலைமை வகித்து வந்த தாவா கான் மெனாபலை, எங்களது அமைப்பைச் சோந்தவர்கள் சுட்டுக் கொன்றனர். முஜாஹிதீன்கள் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் அவர் படுகொலை செய்யப்பட்டார். அவரது தவறான செயல்களுக்குத் தண்டனையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே பல ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகளை தலிபான்கள் படுகொலை செய்துள்ளனர். ராணுவத்தினர் அல்லாதவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு, இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் பொறுப்பேற்றாலும், அந்தத் தாக்குதல்களை தலிபான்கள்தான் நடத்தியதாக ஆப்கன் அரசு கூறி வருகிறது.

அமைச்சர் மீது தாக்குதல்

ஏற்கெனவே, ஆப்கன் பாதுகாப்புத் துறை இடைக்கால அமைச்சர் பிஸ்மில்லா கான் முகமதியைக் குறிவைத்து அவரது இல்லத்தில் தலிபான்கள் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க கூட்டுப் படையினர், அங்கிருந்து முழுமையாக தங்களது நாடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். ஏற்கெனவே கணிசமான பகுதிகளைக் கைவசம் வைத்திருந்த தலிபான் அமைப்பினர், இந்தச் சூழலைப் பயன்படுத்தி, கிராமப் புறங்களில் புதிய பகுதிகளைக் கைப்பற்றி வருகின்றனர்.

அவா்களுக்கு எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதற்கு ஆப்கன் ராணுவமும் துணைபுரிந்தது. இதற்குப் பழி வாங்குவதற்ககாகவே பாதுகாப்புத் துறை அமைச்சா் பிஸ்மில்லா கான் முகமது இல்லத்தில் தாக்குதல் நடத்தியதாக தலிபான்கள் அறிவித்தனர். இந்த நிலையில், அரசு ஊடகப் பிரிவுத் தலைவரை தலிபான்கள் தற்போது சுட்டுக் கொன்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *