செய்திகள்

ஆப்கானிஸ்தானை 56 ரன்களில் சுருட்டி முதல்முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா

Makkal Kural Official

டிரினிடாட், ஜூன் 27–

டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 56 ரன்களில் சுருட்டி தென் ஆப்பிரிக்க அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

மேற்கு இந்தியத் தீவுகளின் டிரினிடாட்டில் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணிக்கு தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர்கள் அதிர்ச்சி அளித்தனர். அந்த அணி 11.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்கள் மட்டுமே எடுத்தது. அஸ்மதுல்லா 10 ரன்கள் எடுத்தார். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இதில் குர்பாஸ், நபி மற்றும் நூர் அகமது ஆகியோர் ரன் ஏதும் எடுக்கவில்லை.

தென் ஆப்பிரிக்க அணி சார்பில் மார்கோ யான்சன் மற்றும் ஷம்சி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ரபாடா மற்றும் நோர்க்யா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தனர். அந்த அணி 13 ரன்களை எக்ஸ்ட்ராவாக கொடுத்திருந்தது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைத்தது. அதற்குக் காரணம் அதில் இருந்த புற்கள் என வர்ணனையாளர்கள் சொல்லி இருந்தனர்.

டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் ஆப்கானிஸ்தானின் 56 ஆல் அவுட் குறைந்தபட்ச ரன்களாக அறியப்படுகிறது. அதே போல ஆப்கானிஸ்தான் அணி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் எடுத்த குறைந்தபட்ச ரன்னாகவும் இது உள்ளது. மேலும், ஐசிசியின் முழு நேர உறுப்பினர்களாக உள்ள அணிகள் டி20 உலகக் கோப்பை தொடரில் எடுத்துள்ள குறைந்தபட்ச ரன்களில் இது இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் 2021 எடிஷனில் துபாயில் நடைபெற்ற போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 55 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து என்பது குறிப்பிடத்தக்கது.

57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்பிரிக்க விரட்டியது. டிகாக் மற்றும் ரீஸா ஹென்றிக்ஸ் இணைந்து ஆட்டத்தை தொடங்கினர். இதில் ஃபரூக்கி வீசிய 2-வது ஓவரில் 5 ரன்களில் போல்ட் ஆனார் டிகாக். அதன் பின்னர் கவனமாக ஆடிய கேப்டன் மார்க்ரம் மற்றும் ஹென்றிக்ஸ் இணையர், அணியை வெற்றி பெற செய்தனர். 8.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்தது தென் ஆப்பிரிக்கா. மார்க்ரம் 23, ஹென்றிக்ஸ் 29 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் 9 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்கா.

நீண்ட கால கானவு நிறைவேறியது

இது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் பொன்னான நாளாக அமைந்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறி அசத்தியுள்ளது. ஐ.சி.சி. 50 ஓவர் மற்று டி20 உலகக்கோப்பை வரலாற்றில் தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணியின் நீண்ட கால கனவு இன்று நிறைவேறியுள்ளது. இந்த வெற்றியை அந்த நாட்டு மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் மோசமான சாதனை

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்க அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 56 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அரையிறுதி ஆட்டத்தில் குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆன அணி என்ற மோசமான சாதனையை ஆப்கானிஸ்தான் படைத்துள்ளது.

இந்தியா – இங்கிலாந்து மோதல்: மழைக்கு வாய்ப்பு

டி20 உலகக் கோப்பையில் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன இந்தியாவும், நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த ஆட்டம் கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த ஆட்டம் நடைபெற உள்ள கயானாவில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கு 70 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆட்டத்திற்கு ரிசர்வ் நாள் கிடையாது. ஆட்டத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால் சூப்பர் 8 சுற்று புள்ளி பட்டியல் அடிப்படையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணி எல்லா வகையிலும் சரிசமமான பலத்துடன் இருப்பதால் இந்தியாவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இவ்விரு அணிகள் 20 ஓவர் போட்டியில் இதுவரை 23 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 12-ல் இந்தியாவும், 11-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன.

கடைசியாக 2022-ம் ஆண்டு உலகக் கோப்பையில் அடிலெய்டில் நடந்த அரைஇறுதியில் இந்திய அணி இங்கிலாந்துடன் மோதி இருந்தது. அதில் இந்தியா நிர்ணயித்த 169 ரன் இலக்கை இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது. அந்த மோசமான தோல்விக்கு இந்தியா வட்டியும், முதலுமாக பதிலடி கொடுக்குமா என்பதே ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பார்ப்பாக உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *