காபூல், மே 11–
ஆப்கானிஸ்தானில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.
கடந்த சில தினங்களாக ஆப்கானிஸ்தானில் காபூல், பஹ்லன் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர் என தலிபான் அரசு தெரிவித்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல ஆயிரக்கணக்கானவர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஆறுகளின் ஓரம் இருந்தவர்கள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டு விட்டதால் அதிக அளவிலான உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி காயமடைந்த மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு உரிய சிகிச்சை மற்றும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தலிபான் அரசு தெரிவித்துள்ளது.