காபூல், செப். 12–
ஆப்கானிஸ்தானில் போதிய உணவு கிடைக்காமல் கடந்த 6 மாதங்களில் சுமார் 700க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் நூற்றுக்கணக்கில் குழந்தைகள் இறப்பதற்கு வறுமையே பொதுவான காரணமாக இருக்கிறது. இங்கு மக்களுக்கு போதிய உணவு கிடைக்காமல் குழந்தைகள் இறக்கின்றனர். ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஆனால் மருத்துவர்களால் கூட அவர்களின் உயிரைக் காப்பாற்ற முடியாத அளவுக்கு நிலைமை கட்டுப்பாடில்லாமல் உள்ளது.
ஆப்கானிஸ்தானில் 3.2 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல தசாப்தங்களாக ஆப்கானிஸ்தான் போராடி வரும் நிலைமைகள் இவை. இதற்கு காரணம் 40 ஆண்டுகால போர், வறுமை மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு உருவாக்கப்பட்ட சூழ்நிலை. இப்போது நாட்டில் நிலைமை ஒவ்வொரு நாளும் கட்டுப்பாட்டை மீறி வருகிறது.
700 குழந்தைகள் பலி
இது குறித்த பிபிசி அறிக்கையின் படி, மருத்துவமனைகளில் 7-8 படுக்கைகளில் சுமார் 18 குழந்தைகள் கிடக்கின்றனர். இங்கே குழந்தைகளால் நகரவோ அல்லது ஒலி எழுப்பவோ கூட முடியவில்லை. அத்தனை பலவீனமாக உள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் மட்டும் இப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமார் 700 குழந்தைகள் இறந்துள்ளனர். அதாவது ஒவ்வொரு நாளும் மூன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறக்கின்றனர். சுகாதார மையம், உலக வங்கி மற்றும் யுனிசெஃப் ஆகியவை நிதியுதவியை வழங்கவில்லை என்றால் இந்த இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.
கடந்த ஆகஸ்ட் 2021 வரை ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பொது சுகாதார மையங்களும் சர்வதேச நிதியுதவியுடன் நடத்தப்பட்டன. அப்போது இந்த பிரச்சனை இல்லாமல் இருந்தது. ஆனால் தலிபான்கள் நாட்டைக் கைப்பற்றியபோது, பல்வேறு சர்வதேச தடைகள் காரணமாக நிதியுதவிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. இதனால், இங்குள்ள சுகாதார வளாகங்கள் பாழடைந்தன. அத்தகைய சூழ்நிலையில், உதவி நிறுவனங்கள் முன் வந்து தற்காலிக உதவிகளை வழங்குகின்றன. ஆனால் இவையும் ஆப்கானிஸ்தானில் பயனுள்ளதாக இல்லை. இங்கு ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.