செய்திகள்

ஆப்கனில் இருந்து இதுவரை 7 ஆயிரம் பேர் வெளியேற்றம்

அமெரிக்கா ராணுவம் தகவல்

நியூயார்க், ஆக. 20–

ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 7 ஆயிரம் பேர் விமானம் மூலம் வெளியேற்றப்பட்டிருப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் வெளியேறத் தொடங்கியதை அடுத்து, தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். காபூலை, தாலிபான்கள் கைப்பற்றியதும், அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பினார். அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

ஆப்கானை கைப்பற்றியுள்ள தலிபான்கள், இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான் எனப் பெயர் மாற்றம் செய்துள்ளனர். இந்நிலையில் தலிபான்களால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சும் ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள், நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். விமானத்தின் இறக்கைகளிலும், சக்கரங்களிலும் தொற்றிக் கொண்டு பலர் தப்ப முயன்ற காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

7 ஆயிரம் பேர் வெளியேற்றம்

தலிபான்களின் கடந்த கால ஆட்சியின்போது ஏற்பட்ட கஷ்டங்களை நினைத்து அவர்கள் எப்படியாவது அங்கிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல நினைக்கின்றனர். காபூல் விமான நிலையத்துக்கு வரும் எந்த விமானத்திலாவது ஏறி செல்லும் மனநிலையில், பீதியோடு விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.

இந்நிலையில், பொதுமக்களை வெளியேற்ற வசதியாக காபூல் விமான நிலையத்தில் தற்போது 5 ஆயிரத்து 200 அமெரிக்க வீரர்கள் நிறுத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 9 ஆயிரம் பேர் வரை வெளியேற்ற போதுமான விமானங்கள் கைவசம் இருப்பதாகவும் கடந்த 14 ஆம் தேதி முதல் இதுவரை 7 ஆயிரம் பேரை வெளியேற்றிருப்பதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *