நியூயார்க், ஏப். 16–
குழந்தைகளின் பாலியல் சுரண்டல் உள்ளிட்ட காரணங்களால், டுவிட்டரில் இருந்து கடந்த ஒரு மாதத்தில் 2 லட்சம் இந்தியர்களின் கணக்குகள் நீக்கபட்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியது முதலே அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆட்குறைப்பு, பெயர் மாற்றம், மாதச் சந்தா என தினம் தினம் புதுப்புது அறிவிப்புக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அதிரடியாக எக்ஸ் தளத்தில் இருந்து 2 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 2,12,627 இந்தியர்களின் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக எக்ஸ் தளம் தனது மாதாந்திர அறிக்கையில் அறிவித்துள்ளது. இந்த வகையான கணக்குகளில் பெரும்பாலானவை குழந்தைகளின் பாலியல் சுரண்டல் மற்றும் ஒருமித்த நிர்வாணத்தை ஊக்குவிப்பதன் காரணமாகும். பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் குற்றச்சாட்டில் இந்தியாவில் 1,235 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
டுவிட்டர் அறிக்கை
இது குறித்த விரிவான நடவடிக்கை, ஆன்லைன் அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கும், மேலும் பயனர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் எக்ஸ் தளம் முடிவு செய்துள்ளது. இந்த திடீர் நீக்கம் குறித்து பயனர்களுக்கு எக்ஸ் நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் எங்கள் தளத்தில் குழந்தைகள் ஆபாச விடியோ, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் கணக்குகள் மீதான நடவடிக்கை எடுக்கும் நடைமுறை நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது. இந்திய பயனர்களிடம் இருந்து எக்ஸ் கணக்குகளின் மேல் 5,158 புகார்கள் பெறப்பட்டு, அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீக்கம் செய்யப்பட்ட கணக்குகளில் 86 பேர் நீக்கத்துக்கு எதிராக முறையிட்டு விளக்கம் அளித்தனர். 7 கணக்குகளின் விளக்கம் ஏற்கப்பட்டு நீக்கம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.