செய்திகள்

‘ஆபரேஷன் விஜய்’: ராணுவ வீரர்களின் துணிச்சலான வெற்றிக் கதை!

கார்கில் போரில் மூவண்ணக் கொடியை ஏற்றி வருவேன்; இல்லையேல் போர்த்தி வருவேன்!

இந்திய விடுதலையின் 75 ஆம் ஆண்டு நிறைவை நினைக்கும் வேளையில், இந்தியாவை 75 ஆண்டுகளாக உயிரை பணயம் வைத்து காப்பாற்றி வரும் ராணுவ மாவீரர்களை பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது அல்லவா? அந்த வகையில், இந்தியா எப்போதும் பெருமை கொள்ளும் கார்கில் திராஸ் பகுதியில் பாகிஸ்தான் படையெடுப்பாளர்கள் கைப்பற்றிய பகுதிகளை மீட்பதற்காக தொடங்கப்பட்ட ‘ஆபரேஷன் விஜய்’ வெற்றியின் 10 ராணுவ வீரர்களின் துணிச்சலான கதைகள்தான் இது.

“கார்கில் விஜய் திவாஸ்” ஆண்டுதோறும் ஜூலை 26 அன்று கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் நிம்மதியாக உறங்குவதற்காக கார்கில் போரின் போது ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்தது நாம் அனைவரும் அறிந்ததே. அவர்களின் வீரம், துணிச்சல் மற்றும் ஆர்வத்தின் கதைகள் வாழ்க்கையை விட பெரியவை. அவர்களின் துணிச்சலான கதைகள் நம்மை பெருமைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் தியாகங்களும் கண்களை கொஞ்சம் ஈரமாக்குகின்றன.

1. கேப்டன் விக்ரம் பத்ரா

கேப்டன் விக்ரம் பத்ரா, செப்டம்பர் 9, 1974 இல், இமாச்சலப் பிரதேச மாநிலம் பாலம்பூரில் கிர்தாரி லால் பத்ரா மற்றும் கமல் காந்தா ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவரது தாயார் பள்ளி ஆசிரியராகவும், தந்தை அரசுப் பள்ளி தலைமையாசிரியராகவும் பணியாற்றினர். விக்ரம் பத்ரா, ஜூன் 1996 இல் மானெக்ஷா பட்டாலியனில் உள்ள ராணுவ இந்திய ராணுவ அகாடமியில்( IMA) சேர்ந்தார். அவர் தனது 19 மாத பயிற்சியை முடித்த பிறகு, ஜம்மு காஷ்மீர் ரைபிள்ஸ் 13 வது பட்டாலியனில் லெப்டினன்டாக நியமிக்கப்பட்டார். சிலகால பயிற்சிக்கு பின், உத்தரபிரதேசத்தின் ஷாஜஹான்பூர் பட்டாலியனுக்கும் பின்னர் ஜம்மு மற்றும் காஷ்மீர், திராஸ் ஆகிய இடங்களுக்கும் நியமிக்கப்பட்டார்.

கார்கில் போரின் ஹீரோ என்று அழைக்கப்படும் கேப்டன் விக்ரம் பத்ரா, 5140 என்ற சிகரத்தை மீண்டும் கைப்பற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார். போரின் போது, ​​வெற்றி குறியீடாக, “உள்ளம் கேக்குதே இன்னும்” என்னும் பொருள்பட ‘யே தில் மாங்கே மோர்’ என்று விக்ரம் பத்ரா அடிக்கடி பயன்படுத்தினார். 5140 என்ற சிகரத்தை கைப்பற்றிய பிறகு, 4875 என்ற சிகரத்தை கைப்பற்றும் மற்றொரு பணிக்குச் சென்றார். இந்திய இராணுவத்தின் மிகக் கடினமான பணிகளில் இதுவும் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

போரில், அவரது சக மனிதர்களில் ஒருவர் சுடப்பட்டார். பின்னர், அவரை காப்பாற்ற, அவருடைய பணியை எடுத்து, எதிரி நிலைகளை அழிக்கும் போது, விக்ரம் கொல்லப்பட்டார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த இந்த கார்கில் போரின் போது, வீரமரணம் அடைந்ததற்காக இந்தியாவின் உயரிய மற்றும் மதிப்புமிக்க விருதான பரம் வீர் சக்ரா விருது அவருக்கு வழங்கப்பட்டது.

விடுமுறை நாட்களில் வீட்டிற்கு வரும் விக்ரம் பத்ராவின் புகழ்பெற்ற மேற்கோள் என்றால், “ஒன்று நான் மூவண்ணக் கொடியை (இந்தியக் கொடி) ஏற்றிவிட்டு வருவேன், அல்லது அதனை உடலில் போர்த்திக்கொண்டு வருவேன், ஆனால் நான் நிச்சயமாக திரும்பி வருவேன்” என்று மன உறுதியோடு கூறி வந்துள்ளார்.

வீரன் இருமுறை யோசிப்பதில்லை

2. கிரெனேடியர் யோகேந்திர சிங் யாதவ், 1980 மே 10 ந்தேதி உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹரில் உள்ள சிகந்த்ராபாத்தில் கரண் சிங் யாதவ் மற்றும் சாந்தரா தேவி ஆகியோரின் மகனாக பிறந்தார். கார்கில் போரில் இவருடைய பட்டாலியன் 12 ஜூன் 1999 அன்று டோலோலிங் உச்சியை கைப்பற்றியது. அந்த முயற்சியில் 2 அதிகாரிகள் உள்பட 20 க்கும் மேற்பட்ட மாவீரர்கள் தங்கள் உயிரைத் ஈகம் செய்தனர். மேலும் கட்டக் படைப்பிரிவில் இணைந்திருந்த யோகேந்திர சிங், 16500 அடி உயரமுள்ள ‘டைகர் ஹில்’ என்ற செங்குத்தான குன்றின் மேல் அமைந்துள்ள எதிரிகளின் மூன்று பதுங்கு குழிகளை கைப்பற்றும் போர் திட்டத்திற்கு நியமிக்கப்பட்டார்.

பதுங்கு குழிகளை கைப்பற்றும் நோக்கில் கயிற்றின் உதவியோடு செங்குத்தான குன்றின்மேல் ஏறிய யோகேந்திர யாதவ் மீது, எதிரிகள் ராக்கெட்டை கொண்டு தாக்கினர். பல தோட்டாக்களால் தாக்கப்பட்ட நிலையிலும், வலியைக் பொருட்படுத்தாமல், கையிற்றை பற்றி மேல் ஏறினார். எதிரியின் முதல் பதுங்கு குழியை அழிக்க, மெதுவாக ஊர்ந்து சென்று, ஒரு கையெறி குண்டை எதிரிகள் மீது வீசினார். அது நான்கு பாகிஸ்தான் வீரர்களைக் கொன்றது. இதனால் இந்திய படைப்பிரிவினர் குன்றின் மேல் ஏறுவதற்கான வாய்ப்பை வழங்கியது.

யாதவ் தொடர்ந்து சண்டையிட்டு, சக வீரர்களின் உதவியுடன் இரண்டாவது பதுங்கு குழியையும் அழித்தார், மேலும் சில பாகிஸ்தான் வீரர்களையும் கொன்றார். இதனால் மேலும் உள்ள இந்திய படைப்பிரிவுகளும் மேல் ஏறி வருவதற்கான வாய்ப்பை வழங்கியது. இவ்வாறான வழிகளில் யோகேந்திர யாதவ் குழுவினர், கார்கில் போரின் கடினமான பணிகளை துணிச்சலோடு நிறைவேற்றினார்கள்.

அதன்பின்னர், யோகேந்திர சிங் யாதவ் தூர்தர்ஷனுக்கு அளித்த பேட்டியில், “ஒரு போர்வீரன் என்பவன், தன்னலமற்ற காதலனைப் போன்றவர். இந்த நிபந்தனையற்ற அன்பின் காரணமாக மன உறுதி வருகிறது. இதனால், தனது நாடு, தனது படைப்பிரிவு மற்றும் சக வீரர்கள் மீதான அன்பும் அதில் அடங்குகிறது. ஒரு போர்வீரன் உயிரைப் பணயம் வைப்பதற்கு முன் இரண்டு முறை யோசிப்பதில்லை என்றார். 1999 ஆம் ஆண்டு ராணுவத்தினருக்கு வழங்கப்படும் இந்தியாவின் மிக உயரிய விருதான பரம் வீர் சக்ரா விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published.