ஸ்ரீநகர், மே 15–
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியால் நாடே பெருமிதம் கொள்கிறது என்று ஜம்மு–காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருப்பது பாதுகாப்பானதா? இது குறித்து சர்வதேச அணு ஆயுத முகமை கண்காணிக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இதனிடையே, கடந்த 10–ந்தேதி இரவு இரு நாடுகளிடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எல்லையில் படிப்படியாக அமைதியான சூழ்நிலை திரும்பி வருகிறது. இருப்பினும் ஜம்மு–காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
பஹல்காம் தாக்குதல் மற்றும் அதற்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு முதல்முறையாக ஸ்ரீநகர் சென்ற ராஜ்நாத் சிங், ஸ்ரீநகரின் பதாமி பாக் கண்டோன்மென்ட்டில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஜம்மு–காஷ்மீர் பகுதியில் வீசப்பட்ட பாகிஸ்தான் குண்டுகளை அமைச்சர் ஆய்வு செய்தார். சில சிதைவுகளையும் அவர் பார்வையிட்டார்.
பின்னர் ராணுவ வீரர்கள் மத்தியில் ராஜ்நாத் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
“பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடிய துணிச்சலான வீரர்களின் உச்சபட்ச தியாகத்துக்கு முதலில் நான் தலைவணங்க விரும்புகிறேன். அவர்களின் நினைவுகளுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். ராணுவத்தினருக்கு நாடே கடமைப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றியால் நாடே பெருமிதம் கொள்கிறது.
இதுபோன்ற பாதகமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் உங்களுடன் இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், ஆபரேஷன் சிந்தூரின் போது நீங்கள் அனைவரும் செய்தவற்றிற்காக முழு தேசமும் பெருமை கொள்கிறது. உங்கள் பாதுகாப்பு அமைச்சராக இருப்பதற்கு முன்பு, நான் ஒரு இந்திய குடிமகன். ஒரு இந்திய குடிமகனாக உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
நான் இங்கு ஒரு தபால்காரராக உங்கள் மத்தியில் வந்து நாட்டு மக்களின் செய்தியைக் கொண்டு வந்துள்ளேன். அவர்களின் செய்தி ‘நாங்கள் அனைவரும் உங்களைப் பற்றி பெருமைப்படுகிறோம்’ என்பதாகும். ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் ஒரு நடவடிக்கையின் பெயர் மட்டுமல்ல, அது எங்கள் உறுதிப்பாடு. இது போன்ற ஒரு உறுதிப்பாட்டின் மூலம் இந்தியா பாதுகாப்பை மட்டுமல்ல, இந்தியாவுக்கு பதிலடியும் கொடுக்க தெரியும் என ஆபரேஷன் சிந்தூர் நிரூபித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதிகள் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்திய ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். எதிரிகளை அழித்த அந்த சக்தியை உணர நான் இங்கே இருக்கிறேன். எல்லையில் இருந்த பாகிஸ்தானிய பயங்கரவாத முகாம்கள் மற்றும் பதுங்கு குழிகளை நீங்கள் அழித்த விதத்தை, எதிரிகளால் ஒருபோதும் மறக்க முடியாது என்று நினைக்கிறேன்.முரட்டுதனமான நாட்டிற்கு அணு ஆயுதம் தேவையா? பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருப்பது பாதுகாப்பானதா? பாகிஸ்தான் அணு ஆயுதம் வைத்திருப்பது குறித்து சர்வதேச அணு ஆயுத முகமை கண்காணிக்க வேண்டும்.பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் இடம் அணு ஆயுதம் இருப்பது குறித்து உலக நாடுகள் யோசிக்க வேண்டும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
ராணுவ தளபதி சந்திப்பு
காஷ்மீர் சென்றுள்ள ராணுவ தளபதி உபேந்திர திவேதி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வெற்றி அடைய செய்த ராணுவ வீரர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
ராணுவ வீர்கள் மத்தியில் பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லையில் இருந்து பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த வீரர்களை பாராட்டினார். எந்தவொரு சவாலுக்கும் தீர்க்கமான பலத்துடன் பதிலளிக்க, பாதுகாப்பு படை வீரர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.