புதுடெல்லி, ஜூலை 21–
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம், நமது நாட்டின் ராணுவ வலிமையைக் கண்டு உலக நாடுகளே வியந்தன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நமது ராணுவ வீரர்களின் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக வந்த பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:
இன்று நடைபெறும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஒரு வெற்றிக் கொண்டாட்டம் போல இருக்கும். இந்த கூட்டத்தொடர் ராணுவ வீரர்களின் வெற்றி கொண்டாடும். இந்திய ராணுவத்தின் வலிமையை உலகமே வியந்து பார்த்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 100% நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் தீவிரவாத கட்டமைப்பை மண்ணுக்கடியில் புதைத்து விட்டோம். பயங்கரவாதிகளின் இருப்பிடங்களுக்கே சென்று அவர்களை தீரத்துடன் அழித்துள்ளோம்.
வெறும் 22 நிமிடத்தில் பயங்கரவாத முகாம்கள் தரைமட்டமாகின.
உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, உலகத் தலைவர்கள் பலரும், இந்திய ராணுவ ஆயுதங்கள் தங்களை வெகுவாக ஈர்த்துள்ளதாகக் கூறினர்.
இந்தியாவில் ஆயுத உற்பத்தி அதிகரித்து வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் பற்றி உலக நாடுகளிடம் விளக்கம் கொடுக்க, பல கட்சி பிரதிநிதிகள் குழுவின் எம்.பி.க்களும், அவர்களின் கட்சியினரும் வெளிநாடு சென்றதற்கு பாராட்டு. அவர்கள் ஒரு நேர்மறையான சூழ்நிலையை உருவாக்கினர்.
விண்வெளித் துறையில் இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது. ஆக்சியம் 4 திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு சென்று திரும்பிய சுபான்ஷு சுக்லாவுக்கு பாராட்டு. சபான்ஷு சுக்லாவால் இந்திய தேசியக்கொடி சர்வதேச விண்வெளி நிலையத்தில் பறக்கவிட்டப்பட்டது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை. அனைத்து எம்.பி.க்களும் நாட்டு மக்களும் ஒரே குரலில் இந்த சாதனையைப் போற்றுவார்கள். நமது எதிர்கால விண்வெளி திட்டங்களுக்கு இது ஊக்கமாக இருக்கும்.
2014 க்கு முன்பு பணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்தில் இருந்தது, இப்போது அது சுமார் 2 சதவீதமாக உள்ளது; பணவீக்கம் குறைவாகவும் வளர்ச்சி விகிதம் அதிகமாகவும் உள்ளது.
நாட்டில் உள்ள நக்சலைட்டுகள் முழுவதும் ஒழிக்கப்படுவார்கள். நக்சலைட்டுகளின் எண்ணிக்கை அதிவேகமாக குறைந்து வருகிறது. நக்சலைட்டுகள் பிடியில் இருந்த 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மீட்கப்பட்டுள்ளன. நக்சலைட்டுகள் பாதிப்பு இருந்த மாவட்டங்கள் தற்போது வளர்ச்சியை நோக்கி பயணிக்கின்றன. உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா விரைவில் எட்டும். மழைக்கால கூட்டத்தொடர் புதிய தொடக்கங்களுக்கான கூட்டத்தொடர். இது பயனுள்ளதாக இருக்கும். மழைக்கால கூட்டத் தொடரில் சுமுகமான விவாதங்கள் நடத்த வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
![]()





