இந்திய விமானப்படை உறுதி
புதுடெல்லி, மே 11–
பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது, இது தொடர்பாக சரியான நேரத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்படும் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
ஜம்மு–காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.
இதனையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.
இதனிடையே ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது என்று இந்திய விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் கூறியிருப்பதாவது:–
இந்திய விமானப்படை ஆபரேஷன் சிந்தூரில் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும், தொழில்முறையுடனும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. தேசிய நோக்கங்களுக்காக விவேகமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆபரேஷன் சிந்தூர் செயல்பாடுகள் இன்னும் தொடர்கிறது. இது தொடர்பாக சரியான நேரத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்படும். ஊகங்கள் அடிப்படையில் பரவும் தகவல்களை சரிபார்க்காமல் மற்றவர்களுக்கு பகிருவதை தவிருங்கள். சரிபார்க்கப்படாத தகவல்களை நம்புவதையும் பரப்புவதையும் தவிர்க்குமாறு இந்திய விமானப்படை அனைவரையும் கேட்டுக்கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.