நாடும் நடப்பும்
ஆர் முத்துக்குமார்
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைகள், நாட்டின் பாதுகாப்பு கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாத தாக்குதல்களுக்கு அடிக்கடி இலக்காக மாறிய இந்தியா, இப்போது எந்த வெளிப்படையான முன்னறிவிப்பும் இல்லாமல், நேரடியாக துல்லியமான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதை தன் புதிய நோக்காக மாற்றியுள்ளது.
புல்வாமா தாக்குதல் (2019) மற்றும் உரி தாக்குதல் (2016) ஆகியவற்றின் பின்னணியில், இந்தியா எச்சரிக்கையாக இருந்த போதிலும் இப்போது திடீர் பதிலடி கொடுக்க தயக்கமின்றி செயல்பட ஆரம்பித்திருக்கிறது. பாகிஸ்தான் ஆதரிக்கும் பயங்கரவாத அமைப்புகளால் இந்தியாவில் நடத்தப்பட்ட அண்மைய தாக்குதல்களுக்கு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்தியா கடுமையான ராணுவ பதிலடி அளித்துள்ளது. இந்த நடவடிக்கையில், பாகிஸ்தானின் ராவல்பிண்டி, சாக்வால் மற்றும் ஷோர்கோட் பகுதிகளில் உள்ள முக்கிய விமானத் தளங்கள் மற்றும் கட்டுப்பாட்டுத் தளங்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் இராணுவம் நேரடியாக தாக்குதல் நடத்தாதபோதிலும், அதன் துணை அமைப்புகள் – குறிப்பாக TRF (The Resistance Front) போன்ற பயங்கரவாத இயக்கங்கள் மூலம் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இந்த அமைப்புகள் லஷ்கர்-இ-தொய்பாவுடன் இணைந்தவை என்றும் இவற்றின் தலைமையகம் பாகிஸ்தானின் முரிட்கேவில் உள்ளதாகவும் நம்பிக்கைக்குரிய ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.
இந்தியாவில் சமீபத்தில் நடந்த பயங்கரமான தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் குடும்பத்தார் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பின்னணியாக இந்தியா இப்போது எதிரியின் செயல்களை உலக அரங்கில் முறையிடுவதற்கும் மேலாக நேரடியாக தன் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் செயல்படத் தொடங்கியுள்ளது.
கடந்த தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு, பெரும்பாலும் உணர்ச்சிவசப்படாத முறைகளையே இந்தியா பின்பற்றி வந்தது. 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி நடைபெற்ற மும்பைத் தாக்குதலுக்குல் லஷ்கர்-இ-தொய்பா மீது இந்தியா குற்றம் சுமத்தியது. இந்த வழக்கின்போது இது தொடர்பான ஆதாரங்களையும் கொடுத்துள்ளது இந்தியா.
அந்த சமயத்தில் மும்பையின் முக்கிய கட்டடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் நான்கு நாட்கள் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 160 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில் குற்றம் சுமத்தப்பட்ட ராணா, அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டு சமீபத்தில் இந்தியா கொண்டு வரப்பட்டார்.
ஆனால் இப்படி அடி மேல் அடியாக தொடர் தாக்குதல்களுக்குப் பிறகு இந்தியாவின் உத்திகள் மாறியிருக்கிறதா?
2001-ஆம் ஆண்டு பாராளுமன்றம் தாக்கப்பட்டபோதோ, 2006-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி மும்பை தாக்கப்பட்ட போதோ, பதிலடி கொடுப்பதற்கான எந்த சிறப்பு நடவடிக்கையையும் இந்திய அரசு செய்ததில்லை.
பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருக்கின்றன என்பதால் ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது. நாம் வழக்கமான ராணுவத் தாக்குதல் நடத்தினால், அவர்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்து இருக்கலாம், அது நியாயமான பயம்தான்!
ஆனால் 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு உரியில் 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டபிறகு, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி உள்ள தீவிரவாதிகளின் முகாம்களில் ‘துல்லியத் தாக்குதல்’ நடத்தினோம்.
2019-ம் ஆண்டில் புல்வாமா பகுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 40 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன்பிறகு பாலகோட் வரை உள்ளே சென்று வான்வழித் தாக்குதல் நடத்தினோம்!
இம்முறையும் பாகிஸ்தான் ராணுவ ரீதியாகயின்றி, மறைமுக தாக்குதலாக, அதாவது பயங்கரவாதிகளின் முகமாக அவதரித்து தாக்குதல் நடத்தியது.
அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேரை கொடூரமாய் குடும்பத்தார் கண் எதிரேயே சுட்டுக் கொன்றனர்.
இப்படி கொடூரத் தாக்குதல்கள் நடத்தும் போதெல்லாம், இந்தியா ராணுவத்தைப் பயன்படுத்தியே நேரடி பதிலடி தந்து வருகிறது.
அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் போலவே, இந்தியாவும் இப்போது “தாக்குதலுக்கு நேரடி நடவடிக்கை” என்ற கொள்கையை பின்பற்றத் தொடங்கியுள்ளது. உலக அமைப்புகள் என்ன நினைக்கின்றன என்பதைப் பொருட்படுத்தாமல், தன் மக்களின் உயிரைப் பாதுகாக்கும் தைரியமான முடிவுகளை இந்தியா எடுக்கத் தொடங்கியுள்ளது.
சர்வதேச அரங்கில் நமது செயல் சரியே என சாதகமாகத்தான் ஆதரவு குவிந்தும் வருகிறது.
இந்தியாவின் இந்த புதிய பாதுகாப்பு மனநிலை, எதிர்காலத்தில் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு ஒரு வலுவான எச்சரிக்கையாக இருக்கும். தங்கள் நிலப்பரப்பை பயங்கரவாத அமைப்புகளுக்காக பயன்படுத்தும் எந்த நாடும், எதிர்காலத்தில் பதிலடி பெறும் என்பதற்கான காட்சி இது.
இந்த மாற்றம், இந்திய பாதுகாப்பு வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்பதுதான் உண்மை.
நம் மண்ணில் தீவிரவாதத் தாக்குதல் நடந்தால் அது யார் நடத்தியது என்று தெரிந்தால் நாம் நடவடிக்கை எடுப்பதில் தவறு என்ன இருக்கும்?