தலையங்கம்
இன்று அதிகாலை துவங்கியுள்ள ‘ஆபரேஷன் சிந்து’, பஹல்கம் தீவிரவாத தாக்குதலுக்கு நமது பதில் உடனடியாகவும் மற்றும் திட்டமிட்ட ஒன்றாகவும் இருக்கிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்பது பயங்கரவாத இலக்குகளை தாக்கிய இன்றய அதிரடி ஆபரேஷன் சிந்து ராணுவ நடவடிக்கையின் காரணமாக பஹல்பூரில் ஜெய்ஷ்-இ-முகமதுவின் தளம் மற்றும் முரிட்கேவில் லஷ்கர்-இ-தொய்பாவின் வசதிகள் தகர்க்கப்பட்டுள்ளது.
இது ஒரு போர் நடவடிக்கை அல்ல, ஆனால் ஒரு தெளிவான செய்தி, அது பயங்கரவாதத்திற்கு பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம் என்பதாகும்.
போர் நடவடிக்கைக்கும் குற்றம் செய்தோர் மீது பதிலடி என்பதற்கும் நூலிழை வேறுபாடு அதன் கட்டுப்பாடு கொண்ட நடவடிக்கையில் உள்ளது. இன்றைய தாக்குதலில் எந்த பாகிஸ்தான் இராணுவ சொத்தும் குறிவைக்கப்படவில்லை. உண்மையில் கதிகலங்க வைக்கும் கட்டுக்கடங்கா பயங்கரவாத உள்கட்டமைப்புக்கு ஒரு தீர்க்கமான அடியை வழங்கி இருக்கிறோம். மொத்ததில் இது பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான தனது உறுதிப்பாட்டை உலகிற்கு சுட்டிக்காட்டி விட்டோம்.
சர்வதேச அமைப்புகள், குறிப்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில், இந்தியாவின் நிலைப்பாட்டை எதிரொலித்தது. பஹல்காம் தாக்குதலின் பின்னனி குறித்து புதுப்புது சந்தேகங்கள் எழுப்பி குழப்பம் ஏற்படுத்தி கலங்கிய நீரில் மீன் பிடிக்க முற்பட்ட பாகிஸ்தான் முயற்சிகள் அரும்பிலேயே வெட்டப்பட்டது.
கவுன்சிலில் உள்ள பிற உறுப்பினர்கள் பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படும் போராளி அமைப்புகள் குறித்து கவலையைத் தெரிவித்தனர்.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறி இந்தியா நீர்வழங்கலை முழுமையாக நிறுத்தியதுடன் கூடவே பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த விசாவை ரத்து செய்ததும் இஸ்லாமாபாத்திற்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தாலும் பிரதமர் மோடி அதே வேளையில் பேச்சுவார்த்தைக்கான கதவை மூடாமல் ராஜதந்திர நடவடிக்கைகளை துலக்கி இருப்பது அறிவார்ந்த நடவடிக்கையாகும்.
இதற்கிடையில் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தனது படைகளைக் குவித்து கடந்த 10 நாட்களாகவே மீண்டும் மீண்டும் அமைதி ஒப்பந்தத்தை மீறி அத்துமீறல்களில் ஈடுபட்டது வருவதையும் இந்தியாவின் பாதுகாப்பு கவலைகளை நமது ராணுவம் உற்றுக் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறது.
நாடே அதிர்ந்து போய் கடும் கோபத்துடன் அப்பாவி சுற்றுலா பயணிகளை சுட்டுக் கொன்ற பயங்கரவாதத்தை எதிர்க்க துணிந்து அதை நசுக்கிட எடுத்த நடவடிக்கையை நாடே வரவேற்கிறது. தாக்கியதன் குறி, பாக் நிலப்பரப்பை அபகரிக்க அல்ல, நீதியையும் கட்டுப்பாட்டையும் நிலைநாட்டத் தான்.
இதை பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த முடியாத கையாளாகாத நிலையை வெட்டவெளிச்சமாகி விட்டதே என்பதை மறைக்கவே நம் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறார்கள்.
எதிர்தாக்குதல் செய்வோம் என்றும் மிரட்டுகிறார்கள். வருவதை எதிர்கொள்ள தயாராகத் தான் இருக்கிறோம்.
பயங்கரவாதத்திற்கு பாதுகாப்பான புகலிடங்களை தருவது புலிவாலை பிடித்த கதை , அது பாகிஸ்தானுக்கும் நல்லதில்லை , இதை உலகம் புரிந்து கொண்டு விட்டது, அதனால்தான் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில், இந்தியாவின் நிலைப்பாட்டை இதுவரைகுறை கூறவில்லை.