மனிதர்களுக்கு மட்டும் தான் அறிவு இருக்கிறதா? அவர்களுக்கு மட்டும்தான் உணர்வு இருக்கிறதா? அவர்கள் மட்டும்தான் நன்றியுடன் இருக்கிறார்களா? மனிதர்கள் மட்டும்தான் மற்றவருடன் பாசமாக இருக்கிறார்களா? என்பதெல்லாம் அந்த நாயைப் பார்த்த பிறகு முத்துவுக்கு ஒரு மாதிரியாக இருந்தது .இது நிஜம்தானா? இல்லை கடவுள் இப்படி எல்லாம் உயிர்களைப் படைத்திருக்கிறாரா ? இது என்னால் நம்ப முடியவில்லை? என்று அடிக்கடி தன் நண்பர்களிடம் சொல்லிக் கொள்வார் முத்து.
அமைதியாகப் படுத்திருக்கும் நாய் , தன் மகள் நித்யா தனியாகச் சென்றால் அவளுடன் போகிறதே? யாரும் இதற்கு சொல்லித் தருகிறார்களா ? அதற்கு நம் மகளைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உண்மையில் இருக்கிறதா? இது என்ன விந்தை ? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டே இருந்தார் முத்து. கண்டிப்பாக இந்த உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு நாள் நினைத்தார் முத்து.
” நீ முன்னாடி போ ” என்று தன் மகளை அனுப்பி வைத்துவிட்டு முத்துவம் அவர் மனைவியும் அந்த நாயை பார்த்தார்கள். அவர்கள் வீட்டிற்கு முன்னால் படுத்திருந்த அந்த நாய் சற்று முற்றும் பார்த்து விட்டு நித்யா தனியாக நடந்து போவதை அறிந்ததும் படுத்திருந்த இடத்தை விட்டு, எழுந்து நித்யாவின் பின்னாலயே சென்றது .
“இது என்ன அதிசயம். உண்மைதானா ? சரி என்ன செய்கிறது பார்க்கலாம்”
என்று நினைத்த முத்துவும் அவர் மனைவியும் பின்னால் சென்றார்கள். நித்யா ஜெராக்ஸ் கடைக்குச் சென்று ஜெராக்ஸ் எடுக்கும் வரை அங்கே அமைதியாக அமர்ந்திருந்தது, அந்த நாய். இதை எல்லாம் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள் , முத்துவும் மனைவியும். நித்யா ஜெராக்ஸ் எடுத்து வீட்டுக்கு வரும் வரை அந்த நாய் காத்திருந்து விட்டு அவர் வந்ததும் நித்யா பின்னாலேயே ஓடி வந்தது. இதையெல்லாம் கவனித்த முத்துவுக்கு மனைவிக்கும் ஆச்சரியம் மேலிட்டது .
“சரி நாளை என்ன செய்கிறது பார்க்கலாம் ? என்று முத்து, மனைவி, நித்யா மூன்று பேரும் சென்றார்கள் .அப்போதும் அந்த நாய் வீதியில் படுத்திருந்தது. இப்பாேது அந்த நாய் எழவில்லை. நித்யாவுடன் அம்மா, அப்பா வருகிறார்கள் என்று அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தது. இதை பார்த்த முத்துவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை ? நித்யாவுடன் அவர் பெற்றோர் சென்றால் பாதுகாப்பு இருக்கும் அவள் தனியாகச் சென்றால் பாதுகாப்பு இல்லை “
என்று இந்த நாய்க்கு யார் சொல்லிக் கொடுத்தது ?
அதுவும் ஒரு முறை நித்யா தனியா வர வேற்று நாய்கள் அவளைச் சூழ்ந்து கொள்ள இந்த ஒற்றை நாய், அதுவும் மற்ற நாய்களை விடச் சிறிய நாய் , மொத்த நாய்களையும் விரட்டியடித்த காட்சி இன்னும் நம் கண் முன் நிற்கிறதே? என்று முத்துவும் அவர் மனைவியும் யாேசித்தார்கள். அதிலிருந்து அந்த நாயைத் தன் வீட்டில் பிறந்த பிள்ளையாகவே நினைத்தார்கள்.அந்த நாய்க்குச் சாப்பாடு போடுவது. பிஸ்கட் கொடுப்பது என்று அந்தக் குடும்பமே அந்த நாயைப் பாதுகாத்தார்கள். அந்த நாயும் முத்துவின் வீட்டில் ஒரு நபராகவே இருந்தது.
இன்னொரு அதிசயத்தை முத்து அந்த நாயிடம் கண்டார். முத்துவுடன் நன்றாக வாலாட்டிப் பேசும் அந்த நாய் அவரை உரசிப் பேசுவதில்லை. தன் மனைவி, மகள் நித்யாவுடன் மட்டும் உரசி ஒட்டிப் பேசுகிறதே இது எதற்கு ?
“ஓ! இது பெண் நாய் ? அதற்கும் தான் பெண்ணென்ற உணர்வு இருக்கிறது போல. பெண் என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானதா?
என்று உணர்ந்து கொண்டார் முத்து. இந்த ஆச்சர்ய ஆனந்தம் முத்துவை விட்டு அகலவே இல்லை.
” அப்பா நான் போயிட்டு வரேன்”
என்று வீட்டை விட்டு வெளியே கிளம்பினாள் நித்யா.
எங்கோ படுத்திருந்த அந்த நாய் ஓடிவந்து அவளைப் பின்தொடர்ந்தது ஆபத்பாந்தவனாக.