புதுடெல்லி, ஆக.3-–
ஆன்லைன் விளையாட்டுகள் மீதான 28 சதவீத ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, அக்டோபர் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக மத்திய நிதி மந்திரி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் செயல்பட்டு வருகிறது. அதில், அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளும் இடம் பெற்றுள்ளனர்.
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் அவ்வப்போது வெவ்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
சமீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி. கூட்டத்தில், ஆன்லைன் விளையாட்டுகளில் கட்டப்படும் பந்தயத்தொகையின் மொத்த முகமதிப்பு மீது 28 சதவீத ஜி.எஸ்.டி. வரிவிதிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது. அதில், ஆன்லைன் விளையாட்டுகள் மீதான வரிவிதிப்பை அமல்படுத்த வரி சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தில், 28 சதவீத ஜி.எஸ்.டி.யை திட்டமிட்டபடி அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
ஆன்லைன் விளையாட்டுகளின் பந்தயத்தொகை மொத்த முகமதிப்பு மீதான 28 சதவீத ஜி.எஸ்.டி.யை அக்டோபர் 1-ந் தேதி முதல் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி நிதிமந்திரி, ஆன்லைன் விளையாட்டுகள் மீது வரி விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
கோவா, சிக்கிம் ஆகிய மாநிலங்கள், முகமதிப்பு மீது வரி விதிக்காமல், மொத்த வருவாய் மீது வரி விதிக்குமாறு வலியுறுத்தின.
மற்ற மாநிலங்கள், கடந்த கூட்டத்தில் எடுத்த முடிவை அப்படியே அமல்படுத்துமாறு கேட்டுக்கொண்டன. மத்திய, மாநில சட்டங்களில் தேவையான திருத்தங்கள் செய்த பிறகு, அக்டோபர் 1-ந் தேதி, இந்த வரிவிதிப்பு அமலுக்கு வரும்.
அதே சமயத்தில், அமலுக்கு வந்து 6 மாதங்கள் கழித்து, வரிவிதிப்பு ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.