சென்னை, டிச.1–
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா பரிசீலனையில் இருப்பதாகவும், விரைந்து முடிவு எடுப்பதாகவும் கவர்னர் தெரிவித்தார் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரி தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியைச் சந்தித்துப் பேசினார்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா நடந்து முடிந்து சட்டசபை கூட்டத்தொடரில் தமிழக அரசு நிறைவேற்றியது. ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிரான தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு ஏற்கெனவே கவர்னர் ஒப்புதல் அளித்திருந்தார். இதனைத்தொடர்ந்து அவசர சட்டத்தை சட்டமாக்குவதற்கான சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னரின் ஒப்புதல் கோரி அனுப்பி வைத்தது தமிழக அரசு. அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காத நிலையில் அது காலாவதியாகியிருந்தது. அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த கவர்னர், சட்ட மசோதாவுக்கு ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்று தமிழக அரசு தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தது.
அவசர சட்டத்தில் இடம்பெற்றிருந்த அதே அம்சங்கள்தான், சட்ட மசோதாவிலும் இடம்பெற்றிருந்தது. ஆனால் கவர்னர் ஒப்புதல் அளிக்காத நிலையில், அதுதொடர்பாக தமிழக அரசிடம் பல்வேறு விளக்கங்களைக் கேட்டு கவர்னர் கடிதம் எழுதியிருந்தார். தமிழக அரசும் 24 மணி நேரத்திற்குள்ளாக விரிவான விளக்கம் அளித்திருப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் துறையின் செயலாளர்கள் உள்ளிட்டோர் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் சந்தித்துப் பேசினர்.
அமைச்சர் ரகுபதி பேட்டி
கவர்னரின் சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி பேசியதாவது:–தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 21 மசோதாக்கள் கவர்னர் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. கவர்னர் ஒப்புதல் அளித்தால் உடனடியாக ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலுக்கு வரும்.
ஏற்கனவே உள்ள சட்டங்கள் மூலமாக சூதாட்டங்களை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக அனைத்து விவரங்களையும் கவர்னர் கேட்ட பதில்களையும் தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.
ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் தொடர்பாக கவர்னர் ரவியிடம் நேரிலும் விளக்கம் தந்தோம். ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும் விரைந்து முடிவெடுப்பதாகவும் கவர்னர் கூறினார்.
ஆன்லைன் ரம்மி, போக்கர் உள்ளிட்டவை ஒரு நோய் என்று உலக சுகாதார நிறுவனம் கூட எச்சரித்துள்ளது. ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்ததற்கான காரணம் கவர்னருக்கு தான் தெரியும்.
இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.