ஆர். முத்துக்குமார்
தமிழக முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட ஸ்திரமான முயற்சிகள் காரணமாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒரு வழியாக ஆளுநர் ரவி ஒப்புதல் தந்து விட்டார்.
உண்மையில் இத்தடை மசோதா மிக அவசியமான ஒன்று என்பதில் சந்தேகமே கிடையாது.
சூதாட்டம் என்ற அரக்கனை தமிழகம் எதிர்த்து போராடுவது காலாகாலமாக நடந்து கொண்டிருக்கும் ஒன்றாகும்.
நமது அண்டை மாநிலங்களிலும், பிற பகுதிகளிலும் உள்ள குதிரைப் பந்தயங்களில் மட்டுமே சென்னை கிண்டி குதிரைப் பந்தய வளாகத்தில் சூதாட்ட பணம் கட்டி விளையாட முடியும்!
ஆனால் குதிரைகள் ஓடும் விளையாட்டிற்கும், நேரடி சூதாட்ட பணம் கட்டவும் தடை இருக்கிறது.
சிகெரட் விற்பனைக்கும், அதை பொது இடங்களில் உபயோகத்திற்கும் தடை இருப்பதும் உண்மையே! புகைப்பிடித்தல் கடந்த 10 ஆண்டுகளில் மிக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு 95% புகைப்பிடிப்போர் எண்ணிக்கையை அறவே குறைத்து விட்டோம்.
ஆனாலும் காவல்துறை அலுவலகங்களின் அருகாமையிலும் புகையிலைப் பொருட்கள் விற்பனையும், புகைப்பிடித்தலும் நடப்பதையும் பார்க்கிறோம்.
தற்போது முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்திருக்கும் தடை சட்டம் எத்தகையது?
கடந்த அண்ணா திமுக ஆட்சியின்போது இந்த ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் சட்டசபையில் நிறைவேறியது. மறுநாளே இணையதள விளையாட்டு நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தை நாட அவர்களின் எதிர்ப்புக்கு செவி சாய்த்து தடையை நிராகரித்து விட்டது.
தற்போதைய சட்டத்திட்டம் சரியில்லை, ஆகவே தடை செல்லாது, ஆனால் சட்டத்திருத்தம் செய்து தடை விதிக்க வேண்டுமென்றும் நீதிமன்றம் ஆலோசனை தந்து தான் தீர்ப்பை வழங்கி இருந்தது.
பிறகு ஆட்சியை பிடித்த திமுக பொறுப்பேற்ற உடன் முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் விசேஷ குழு அமைத்து பல்வேறு தரப்பினரிடமும் ஆய்வு மேற்கொண்டது.
அதன் முடிவில் பெரும்பான்மையினர் தடை செய்ய வேண்டும் என விரும்புவதை அறிந்து தடைக்கு பரிந்துரையும் செய்தார்கள்.
பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் 1ந் தேதி ‘தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல், ஒழுங்குபடுத்துதல் அவசர சட்டம்’ உருவாக்கப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கும் அனுப்பப்பட்டது.
அவரது சந்தேக கேள்விகளுக்கு உரிய விளக்கங்களை தமிழ்நாடு அரசு தந்து விட்டது. கூடவே சட்டத்துறை அமைச்சரையும் நேரில் ஆளுநருக்கு விளக்கப் பதில்கள் தரவும் செய்ததை கண்டோம்.
இருந்தும் ஆளுநர் 131 நாட்களுக்குப் பிறகு நிராகரித்து விட்டார். ஆனாலும் இது மிக அவசியம் என்று முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்து விட்டதால் கடந்த மாதம் மார்ச் 23 அன்று மீண்டும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி சட்ட வடிவம் பெற நடவடிக்கை எடுத்தார்.
ஆளுநர் அதை சில வாரங்களாகவே நிறுத்தி வைத்திருந்தார். ஆனால் இவ்வார துவக்கத்தில் ஒப்புதல் தந்து விட்டார்.
அது விரைவில் அரசு இதழில் வெளியிடப்படும். நடைமுறைக்கும் வந்து விடும். அதன் பிறகு எல்லாவித ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கள், பணம் அல்லது வெகுமதிகள் அறிவிப்பு எல்லாமே தடை செய்யப்பட்டு விடும்.
தற்போது ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தின்போது வரும் 2ம் பரிசு ரூ.1 கோடி என்றால் முதல் பரிசு? என்ற கேள்வியுடனான விளம்பரமும் நிறுத்தப்பட வேண்டும் அல்லவா?
கிரிக்கெட் ஆட்டத்தின்போது தமிழ் வர்ணனை நேரத்தில் தனியார் எப்எம் ரேடியோவில் அடுத்த ஓவரில் எத்தனை ரன்கள் எடுப்பார்கள்? விக்கெட் விழுமா? போன்ற கேள்விகளுக்கு சரியான பதில் தருவருக்கு வெகுமதிகள் உண்டு. அதுவும் இனி தடை செய்யப்படும்.
ஆன்லைன் விளையாட்டுகள் அடிமைத்தனம் ஏற்படுத்தும் மிகப்பெரிய போதைத்தனம் கொண்ட விவகாரம், அதை ஓரளவு கட்டுப்பாட்டில் வைத்திருக்க தமிழகம் எடுத்து வைத்திருக்கும் இம்முயற்சியால் உடனடியாக ஆன்லைன் சூதாட்ட ரசிகர்களை தடுத்து விட முடியாமல் இருக்கலாம், ஆனால் ஆன்லைனில் தங்களுக்கான தனிமையில் விளையாட்டு தானே என சிறு தொகை செலுத்தி விளையாடும் பல லட்சம் இளைஞர்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஸ்டாலின் ஏற்படுத்தி இருக்கிறார்.
முன்பு குதிரை பந்தயம், பிறகு புகை பிடித்தலை நிறுத்த சட்ட வடிவம் இவற்றை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தின் மீது இப்படி ஒரு யுத்தம் துவங்கி விட்டது, ஸ்டாலின் முயற்சிக்கு எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்து விட்டாலும் அவரது முயற்சியால் ஆன்லைன் அடிமைத் தனத்தின் மீது புதிய விழிப்புணர்வு ஏற்பட ஆரம்பித்து விட்டது அவரது முயற்சிக்கான முதல் வெற்றியே.