சென்னை, அக். 29–
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்ட முன்வரைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்ககளுக்கு தடை விதித்து ஏற்கெனவே அவரச சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அவசர சட்டத்திற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தார். அவரச சட்டம் பிறப்பிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் சட்டம் இயற்ற வேண்டும் என்பதன் அடிப்படையில், கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட முன்வரைவு, சட்டப்பேரவையின் முன்வைக்கப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஆளுநர் ஒப்புதல்
இந்நிலையில், இந்த ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டமுன்வடிவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அரசிதழில் இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியானபிறகு சட்டமாக நடைமுறைக்கு வரும்.
இந்த சட்டத்தின்படி, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கு 3 மாத சிறை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டுமே வழங்கப்படும். சூதாட்டத்தை நடத்துபவருக்கு ரூ.10 லட்சம் அபராதம் அல்லது 3 ஆண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை கண்காணிக்க ஒரு ஆணையம் அமைக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.