சிறுகதை

ஆன்லைன் கிளாஸ் – ராஜா செல்லமுத்து

தொடர்ந்து 2 ஆண்டுகள் பள்ளிகள் நடைபெறாததால் ஆன்லைன் வகுப்பில் தான் இப்போது மாணவர்கள் ஆக்கிரமித்து கிடந்தனர் .

வகுப்பறையில் படித்தாலே தலையில் ஏறாத பாடங்கள் ஆன் லைனில் படிப்பதால் மட்டும் எப்படிப் புரியப் போகிறது? அது பாடம் எடுப்பவருக்கும் பாடம் படிப்பவருக்கும் மட்டுமே வெளிச்சம்.

வகுப்பறைகளை மூடிவிட்டு செல்போன்களில் பாடம் நடத்தும் இந்த அறிவியல் உலகத்தில் படிப்பெல்லாம் இப்போது கரஸ்பாண்டன்ட் கோர்ஸ் என்ற வகையில்தான் இருக்கிறது.

வழக்கம்போல அந்த பள்ளி காலையில் ஆன்லைன் வகுப்பு ஆரம்பித்தது. நிறைய படிக்காத அம்மாவிடம் ஒன்பதாவது படித்துக் கொண்டிருக்கிறான் மகன் மனோஜ். எப்படி ஆன்லைன் வகுப்பை தொடர்பு கொள்ள வேண்டும் எந்த பட்டனை அழுத்தி ஆன்லைன் வகுப்பு திறக்க வேண்டும் என்பதை எல்லாம் சொல்லிக் கொடுத்திருந்தான் மனோஜ்.

அவன் ஆன்லைன் வகுப்பு தொடங்கி வைத்து விட்டு மற்ற வழிகளில் ஈடுபடுவான்.

டிவி பார்ப்பது .நொறுக்குத் தீனிகள். தின்பது வீட்டிலிருக்கும் அக்காவுடன் கேம் விளையாடுவது. சீட்டு விளையாடுவது என்று இருப்பான்.

இதைக் கவனித்தாள் அம்மா. ஸ்கூலுக்கு பீஸ் கட்டி இருக்கும் ஆன்லைன் கிளாஸ் நடந்துட்டு இருக்கு . அதக் கவனிக்காம நீயே இந்த வேலை செஞ்சிட்டு இருக்கே என்று அம்மா திட்ட…

அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா. ஆன்லைன் கிளாஸ் அட்டென்ட் பண்ணலைன்னாலும் அவங்க ஆல் பாஸ் போட்டுடுவாங்க. அவங்க சொல்றது எங்கே புரியப் போகுது? என்று மழலை கலந்த மொழியில் பேசுவான் மனோஜ்.

இது அம்மாவுக்கு கொஞ்சம் சங்கடத்தை தந்தாலும் அதிகம் படிக்காத அந்தம்மா அந்த ஆன்லைன் வகுப்பைக் கொஞ்சம் கவனித்தாள். அவர்கள் பேசுவது என்னவென்று புரியாமல் தான் இருந்தது.

புள்ள எப்படி படிக்கலாம்? புத்தகத்தை தூக்கிட்டு போய் படிக்கிற பள்ளிக்கூடத்திலேயே அவனுக்கு பாடம் ஏறாது. இதுல ஆன்லைன்ல அவனுக்கு எங்க ஏறுது ? அதுவும் அவங்க என்ன பேசுறாங்கன்னு நமக்கு புரிய மாட்டேங்குது? அவனுக்கு எப்படி புரியும் ? என்று அம்மா உணர்ந்துகொண்டாள்.

செல்போனைத் திறந்து வைத்த மனோஜ் வகுப்புகளை கவனிக்காமல் மற்ற வேலைகளில் ஈடுபடுவான்.

ஒருநாள் காலை தாமதமாக எழுந்த மனோஜ் வருவதற்கு முன்பாகவே ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பித்து விடும் என்று ஏற்கனவே அம்மாவிடம் எப்படி செல்போனை ஆன் செய்வது. வகுப்பிற்குள் எப்படி நுழைவது என்று சொல்லிக் கொடுத்திருந்தான் மனோஜ்.

அதன்படியே அம்மா செல்போனை ஆன் செய்து விட வகுப்புகள் ஆரம்பம் ஆகி இருந்தன.

மனோஜ் ஆன்லைன் வகுப்பில் சேர்ந்து விட்டான் என்று செய்தி பள்ளியில் இருக்கும் பட்டியலில் காட்டியது .

ஆனால் அவன் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான்.

டேய் கிளாஸ் ஆரம்பிச்சிருச்சு பாரு எந்திரி என்று அம்மா எழுப்பினாள்.

சும்மா இரும்மா . தூக்கம் வருது. அப்புறமா இருந்திருக்கிறேன் என்று பதில் சொல்லிவிட்டு மறுபடியும் அவன் குப்புறப் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான்.

ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பம் ஆகி ஆசிரியர் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்.

மனோஜ் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டு இருந்தான்.

ஆனால் அவன் வகுப்பில் சேர்ந்ததாகத் தான் பள்ளி நிர்வாகம் நினைத்துக் கொண்டிருக்கிறது. இப்படி எத்தனை குழந்தைகள் தூங்குகிறார்கள். கூட மற்ற வேலை செய்கிறார்கள். ஆனால் ஆன்லைன் வகுப்புகள் மட்டும் அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது என்று செய்தி சொன்னது பள்ளிக்கூடம். தாமதமாக எழுந்த மனோஜ் செல்போன் முன்னால் உட்கார்ந்தபோது, ஆன்லைன் வகுப்பு முடிந்திருந்தது.

ஏண்டா காலையிலிருந்து இப்ப வரை தூங்குன. ஆன்லைன் வகுப்பு நடத்திக்கிட்டு இருக்காங்க. நீ கொறட்டை விட்டு தூங்கு என்று அம்மா சொல்ல….

அம்மா… அவங்க சொல்றது எனக்கு ஒன்னும் புரியல . அதான் தூங்கிட்டேன் . அவங்களுடைய கணக்கு நான் செல்போனை ஆன் பண்ணி ஆன்லைன்ல இருக்கணும் அப்படிங்கிறது மட்டும்தான். மத்தபடி ஒன்னும் இல்லை பேசாம இரு என்று பதில் சொன்னான்.

என்னமோ செய் என்று சொல்லிவிட்டு அம்மா வேலையில் முழ்கினாள்.

மறுநாளும் ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பமானது.

படுக்கையில் படுத்தபடியே அம்மா அந்த ஆன்லைன் கிளாஸ் பட்டனை ஆன் பண்ணு என்று சொல்லிக் கொண்டு குப்புறப் படுத்துக் கிடந்தான் மனோஜ் .

ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பம் ஆயின . அம்மா சமைத்துக் கொண்டிருந்தாள்.

செல்போனில் ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். மனோஜ் தூங்கிக்கொண்டிருந்தான்.

பெரும்பாலான ஆன்லைன் வகுப்புகள் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றன என்று சாட்சிகள் கூறுகின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *