சிறுகதை

ஆனந்த தீபாவளி – டாக்டர். கரூர். செல்வராஜ்

பிரபலமான ஜவுளிக் கடையில் தீபாவளி துணிகள் வாங்குவதற்காக ஆனந்த் அவரது மனைவி லதா, மகன் ராஜ்குமார், மகள் அனிதா ஆகியோர் வந்திருந்தனர்.

ஊரிலேயே மிகவும் பெரிய ஜவுளிக் கடைக்கு வந்திருந்த ஆனந்தின் 17 வயது மகனும் 15 வயது மகளும் துணிக்கடையில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்தார்கள்.

மனைவிக்கும் குழந்தைகளுக்கும் அவரவர் விரும்பிய துணி வகைகளை வாங்கிக் கொள்ள அனுமதி தந்திருந்த ஆனந்த், துணிக்கடையில் மிகப் பொறுமையாக நடந்து கொண்டான்.

துணிகளை தேர்வு செய்து கொண்டிருந்த ஆனந்தின் மனைவி லதா ,

” என்னங்க “

” சொல்லு லதா”

” எனக்கு இந்தப் புடவை ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு, வாங்கிக்கட்டுமா? விலை 3000 ரூபா தாங்க. அதை வாங்கலாமா? என்று கேட்டாள் லதா.

“உனக்குப் பிடித்ததை வாங்கிக்கம்மா” என்றான் ஆனந்த்.

தனக்குப் பிடித்தமான சுடிதார் – – லெகின்ஸ் எடுத்துக் கொண்டு வந்த ஆனந்த்தின் மகள் அனிதா தன் அப்பாவிடம் “அப்பா, எனக்கு இந்த ட்ரஸ் ரொம்ப புடிச்சிருக்குப்பா, எடுத்துக்கவா? இந்த ட்ரஸ் விலை 1500 ரூபாய் தாம்பா என்றாள்”

மகள் எடுத்த அந்த ட்ரசுக்கு சம்மதித்தார் ஆனந்த்.

தனக்கு பிடித்தமான ஜீன்ஸ் பேண்ட், சட்டையை எடுத்துக் கொண்டு வந்த ராஜ்குமார் தனது அப்பாவிடம் வந்து “அப்பா இதை நான் வாங்கிக்கிறேன் ” என்றான்.

மனைவி, மகன், மகள் ஆகியோரது விருப்பப்படி துணிகளை எடுத்துக் கொள்ள அனுமதித்த ஆனந்த் தனக்காக கதர் வேட்டி, கதர் சட்டை வாங்கிக் கொண்டார். தனக்கு விருப்பமானதை வாங்கிக் கொண்ட ஆனந்த் பிறருக்குத் தருவதற்காக 5 வேட்டி, 5 சட்டை வாங்கினார்.

கணவன் வாங்கிய 5 வேட்டி, 5 சட்டை யாருக்காக என்பதை கேட்க ஆசைப்பட்ட லதா அதைத் துணிக்கடையில் கேட்கக் கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டாள். பிறகு அதை மறந்து விட்டாள்.

அவரவர் விருப்பம் நிறைவேறிய ஆசையோடு வீட்டுக்கு திரும்பினர் ஆனந்த் குடும்பத்தார்.

தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் அன்றே ஆனந்த் தன் மனைவி லதாவிடம் ,

” லதா! சீக்கிரம் கிளம்பு, நாம ரெண்டு பேரும் நம்ம தெருவுக்கு பக்கத்திலே இருக்கிற முதியோர் இல்லத்துக்கு போகிறோம். அந்த முதியோர் இல்லத்தில் இருக்கிற 5 பேருக்கு மட்டும் நான் வாங்கிய வேட்டி – சட்டைகளை தரப்போறேன். இதை இந்த வருஷ தீபாவளிக்கு ஏன் செய்யறன்னா, இந்த வருஷ தீபாவளிக்கு எங்க கம்பெனியிலே எனக்கு தீபாவளி போனஸ் பணம் அதிகமாக கொடுத்தாங்க. பண்டிகையை நம்ம குடும்பம் மட்டும் சந்தோஷமாக கொண்டாடறது முக்கியமில்லை. மத்தவங்களையும் சந்தோஷப்படுத்தி கொண்டாடனும் அது தான் நமக்கு இனிய தீபாவளி” என்றார் ஆனந்த்.

கணவன் கூறியதைக் கேட்டு மனம் மகிழ்ச்சி அடைந்த லதா தன் கணவனோடு முதியோர் இல்லத்துக்கு புறப்பட்டாள். ஆனந்த் குடும்பத்தாரின் தீபாவளி ‘ஆனந்த தீபாவளி’’ ஆனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *