சிறுகதை

ஆனந்தம் | காசாங்காடு வீ காசிநாதன்

ஏன் பாட்டி படுத்துறீங்க..

“மிரரிங்” வைத்துக் கொடுடா.. என் செல்லம்.. (மிரரிங் என்பது – கைத் தொலைபேசியையும் டிவியையும் இணைக்கும் முறை)

ஆமாம் இதே தான் டெய்லி சொல்றீங்க.. எதாவது சொன்னா நான் “தேசிய விருது” பெற்ற நடிகைங்கிறீங்க..

ஏன்டா? நான் என்ன “பொய்யா” சொல்றேன்.?.

“நீங்க ஒரு அப்பாவி”… .. பொய் சொல்லத் “தெரியாத” பாட்டி!

யார் இந்தப் பாட்டி..?

அவங்கதான் நடிகை “ரஞ்சனா”!

பாட்டி… நீங்க எங்கே பிறந்திங்க..?

தமிழகத்தில் தென்பகுதி

எங்கே படிச்சிங்க?

மதுரையில் பள்ளிப் படிப்புடா..

ஏன் மதுரைக்கு வந்தீங்க?

உன் தாத்தா அங்குதான் வேலை பார்த்தார்.

வேற என்ன தெரியும்?

கூடவே “பரதமும் கர்நாடக சங்கீதமும்” முறையாகக் கற்றுக்கொண்டேன்.

எப்படி நடிக்க வந்தீங்க?..

அது ஒரு கதை..

பாட்டிக்கும் பேரனுக்கும் இடையே “சுவையான வாக்கு வாதம்”.

முடிவில் பேரன் பெருந்தன்மையா “ஸ்மார்ட் போனையும் டிவியையும்” மிரரிங் செய்து கொடுக்க பாட்டியின் மலரும் நினைவுகள் தொடர்கிறது.

தற்சமயம் சிங்கப்பூரில் மகன் கெளதம், பேரன் சந்திரன் மற்றும் மருமகள் ஸ்வப்னா ஆகியோருடன் செம்பவாங் பகுதியில் தனித் தரை வீட்டில் வசதியாக வாழ்ந்து வருகிறார்.

மகன் 20 வருடங்களுக்கு முன்பே சிங்கப்பூரில் வேலை கிடைத்து இங்கு வந்து குடியுரிமை பெற்று சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்.

திரைத்துறையில் பொறியாளாரான இவர் விளம்பரப் படங்களுக்கு ஒளிப்பதிவில் துணைச் சேவைகள் செய்யும் நிறுவனத்தைச் சிறப்பாக நடத்தி வருகிறார்.

ரஞ்சனாவிற்கு தற்போது 75 வயதாகின்றது.

பொதுவாக கதைகளில் வயோதிகர் என்றால் கூடவே வியாதிகளும் இருக்கும்.

ஆனால் இவருக்கு குறையொன்றுமில்லை.

பரதநாட்டியம், உணவுக் கட்டுப்பாடு அதற்கு உதவி.

அதிகமாக வெளியில் செல்வதில்லை. வீட்டில் முக்கிய பொழுது போக்கு அவர் நடித்த திரைப்படங்களின் காணொளிக் காட்சிகளை டிவியில் பார்ப்பது..

சாப்பிடுவது ..

தூங்குவது..

பொருளாதார வசதிக்கு குறைவில்லாததால் வீட்டில் ஸ்மார்ட் டிவியும் ஸ்மார்ட் போனும் உள்ளது.

தமிழில் ஸ்மார்ட் போனில் வேண்டிய காணொளியைக் காட்சியை டைப் செய்து “மிரரிங்” மூலம் அகன்ட டிவியில் பார்ப்பது வாடிக்கை.

கைத்தொலை பேசியையும் டிவியையும் இணைப்பதில் ஆரம்ப காலத்தில் சிரமப்பட்டார். பேரன் சந்திரன் உதவியுடன் இப்போது எளிதில் மிரரிங் செய்ய முடிகிறது.

அவர் விரும்பிப் பார்ப்பது மூன்று முக்கிய காணொளிகள்..

அவற்றில் அப்படி என்ன இருக்கிறது?

மூன்றும் அவரது வாழ்க்கையுடன் தொடர்புடையது.

அந்தக் காணொளிகள்.

பரதநாட்டியத்துடன் கூடிய பாடல் காட்சி.

அவர் நடித்து அதிக நாள் ஓடி வெள்ளிவிழாப் படக்காதல் பாட்டு.

சிறந்த நடிகையாக தேர்வுபெற்ற படத்தின் இறுதிக்காட்சி.

வாழ்க்கை சிறிய நிகழ்வுகளில் தடம் மாறி நம்மை வெற்றிப்படிகளிலோ அல்லது பாதாளத்திலோ கொண்டுபோய்ச் சேர்க்கும்.

ரஞ்சனா பள்ளி நிகழ்ச்சியில் பாடிய பாடல் அவரது வாழ்கையை மாற்றி அமைத்தது.

பள்ளி நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வந்த திரைப்பட இசையமைப்பாளர், ரஞ்சனாவின் குரல் வளத்தை கச்சிதமாக் கணித்தார்.

ரஞ்சனா பாடிய பாடலை இசை மேதையான அவர் எதையெல்லாம் ரசித்தார்?

ரஞ்சனாவின் இனிய குரலில் மென்மையான நளினத்தைக் கண்டார்.

அதுமட்டுமா?

பாடலில் சுருதிலயத்தின் உச்ச நிலையிலிருந்து சட்டென கீழிறங்கிப் பாடும் வல்லமையையும் கண்டார்.

பாடும் போது வார்த்தைகளை உடைத்து ஏற்ற இறக்கத்துடன் இனிமை இழையோடப் பாடினார்.

வாக்கியங்களில் ஏற்ற இறக்கத்துடன் பாடுவது எளிது., இவர் வார்த்தைகளைப் பிரித்து பிசிரின்றிப் பாட அதில் லயித்துப் போகிறார்..

ரஞ்சனா பருவ வயதில் அழகில் நிலவினைப்போல ஜொலித்தார்.

திரைப்படத்தில் பாட வாய்ப்புக் கிடைத்தது.

நேரம் நல்லா இருந்தால் வாய்ப்புக்கள் கதவைத் தட்டியபடியே இருக்கும்.

ஒரு பாடல் பதிவின்போது தற்செயலாக அங்கு வந்த பிரபல டைரக்டர் ரஞ்சனாவைவின் இனிய குரலைக் கேட்டு…

யார் இவர்?

இவ்வளவு அழகா உச்சரிக்கிறார்.??

மேலும் இயற்கையான அழகு.…

மேக்கப் இல்லாமலே மெல்லிய புன்னகை தவழும் முகம்.

மயங்க வைக்கும் ஒளி வீசும் விழிகள்.

பரத நாட்டியம் வேறு தெரியுமாம்???

முக்கனிச் சுவைபோல் அல்லவா இருக்கிறார்.

எனது அடுத்த படத்தில் ஒரு பரதநாட்டிய பாடல் உள்ளது.

அதில் இவர் “நடித்தால்” படம் நான் எதிர்பார்க்கும் அளவில் பொருத்தமாக இருக்கும் என அவரது படத்தில் நடிக்க அழைக்கிறார்.

நடிப்பதற்கு தயங்கினாலும் இவரது படம் அமைவது சிறப்புத்தானே?

தயக்கத்துடன் நடிக்க ஒப்புக்கொள்கிறார்.

இப்படித்தான் கேமிரா முன் நின்றவர்.

1970 வந்த இப்படத்தில் ரஞ்சனா ஆடிய பரதநாட்டியப் பாடல் ஓன்று இடம் பெற்றது.

படப்பிடிப்பு எங்கெல்லாம் நடந்தது?

ஸ்டுடியோ, கோயில் மற்றும் பூங்கா என மூன்று இடங்களில் ஒளிப்பதிவானது.

ஓப்பனை?

மூன்று வெவ்வேறு ஒப்பனை.

வேறு என்ன புதுமைகளைக் கையாண்டனர்?

இரண்டு கேமிராக்களைக் கொண்டு நடனக் காட்சிகள் ஒளிப்பதிவானது.

ஒரு கேமிரா ரஞ்சனா பாடும்போது இவரது முகபாவங்களையும் பாடல் வரிகளுக்கேற்ப அவர் வெளியிட்ட நவரசங்களை குளோஸ்அப் ஷாட்டாக பதிவாக்கியது.

மற்றொரு கேமிரா மூலம் லாங் ஷாட்டில் பாடலில் வரும் இசையின் போது அவரது நடன அசைவுகளை மிகத்துல்லியமாக பக்க வாட்டு நகர்வுகளுடன் பதிவு செய்தனர்.

இந்தப்பாடலின் ஒளிப்பதிவில் கேமிராவின் கோணங்கள், நகர்வுகள் பெரிதும் ரசிகர்களால் பாராட்டப் பட்டன.

படத்தொகுப்பாளர் இரண்டையும் கச்சிதமாக எடிட் செய்து இணைத்திருந்தார். பாடலின் வெற்றியில் இந்த யுக்திகள் பெரிதும் உதவியது.

புதுமையை விரும்பும் டைரக்டருக்கு இதுபோல் முயற்சிப்பது வழக்கம்.

ரஞ்சனாவின் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தியது இப்பாடல்.

இந்தக் காட்சியை விரும்பி அடிக்கடி பார்ப்பது இயல்பானதே!

இந்தப் படத்தின் மூலம் திரைத்துறையில் ஒரு முக்கிய நடிகையாக அழுத்தமாகக் கால்பதித்தார் ரஞ்சனா.

**

அடுத்து ரஞ்சனாவின் விருப்பம் அவர் நடித்து வெள்ளிவிழா கொண்டாடிய வெற்றிப்படம்.

“காலம் மாறும்” …. “காதல் மாறாது”… என்ற ஒற்றைவரியை கொண்டு திரைக்கதை அமைத்து வெளியான காதல் படம்.

இந்தப் படத்தில் 5 பாடல்கள்.

அதில் ஒரு பாடலில் கதாநாயகன், கதாநாயகியை வர்ணித்துப்பாட ரஞ்சனா நடனமாடியபடி முகபாவானைகளைக் காண்பித்து நடித்திருந்தார்.

பாடல் வரிகளால் பாடலாசிரியர் இவரது உடல் அமைப்பை இலக்கியத்தர வார்த்தைகளால் கச்சிதமாகச் செதுக்கி இருந்தார்.

பொதுவாக திரைப்படப் பாடல்கள் 3 நிமிடங்களில் முடியும். ஒரு பல்லவி, 2 சரணங்களாக இருக்கும்.

இப்பாடல் படத்தில் 6 நிமிடங்கள் ஓடக்கூடிய நான்கு சரணங்களைக் கொண்டது.

இந்தப் பாடலில் அப்படி என்ன சிறப்பு?

பாடலில் தொடக்க வரியில் முன்நோக்கி கைகளை அசைத்தபடி ஒய்யாரமாய் நடந்துவந்து பின் அப்படியே பின்நோக்கி நகர்வது மயிலில் நடையைப்போல் இருந்தது.

அடுத்த வரியில் இசையின் ஒலிக்கேற்ப நின்றபடியே பக்கவாட்டில் அசைந்து, துள்ளும் மானைப்போல் தாவிக்குதித்து ஒருகாலை மடக்கியபடியும் மறுகாலை நீட்டியபடி அமர்ந்து உடனடியாக எழுவது வியப்பூட்டும்.

இந்த அசைவுகளுக்கு தியேட்டரில் விசில் சத்தம் காதைப் பிளக்கும்…

அப்படி ஒரு அசைவு, அதற்கேற்ப முகபாவனைகளும் மாறுபடும்.

கடைசிச் சரணத்தில் பாடலாசிரியர் நாயகியை நதியுடன் ஒப்பிட்டு வர்ணிக்க அதற்கு ரஞ்சனாவின் முகபாவனை மிகச் சரியாக பொருந்தி இருந்தது.

அந்தப் பாடலில் வரும் பின்னனி இசைக்கு ரஞ்சனாவின் அழகிய நளின நடன அசைவுகள். கண் சிமிட்டல்கள், இன்னும் பல.. அற்புதங்கள்.

இந்த பாடல் காட்சியையும் ரஞ்சனா அடிக்கடி பார்ப்பதுண்டு. இந்தப் படத்திற்குப் பிறகு திரையுலகில் முன்னனி நடிகையானார்.

*

மூன்றாவதாக அவர் விரும்பிப் பார்ப்பது சிறந்த நடிகைக்குத் தேசியவிருது பெற்ற படத்தின் கிளைமேக்ஸ் காட்சி.

அந்தப் படத்தில் நடிப்பிற்கு விருது கிடைக்க முக்கிய காரணம் அதன் கிளைமேக்ஸ் காட்சியில் அவர் வெளிப்படுத்தி இருந்த இயல்பான உருக்கமான நடிப்பு.

ரஞ்சனாவிற்கு 32 வயதில் திருமணம் முடிவானது.

அதற்கு முன்பு விருது கிடைத்த இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானர்.

படம் வளர்ந்து வந்த நிலையில் திருமணமும் நடந்தது.

இதுவே இவரது கடைசிப் படமாக இருந்திருக்கும்.

இஞ்சினீயரான இவரது கணவர் பெண்கள் திறமையை வீணடிக்க கூடாது.

திருமணத்திற்கு பிறகும் நீ சினிமாவில் நடி, என பச்சைக்கொடி காட்டியிருந்தார்.

திருமணமான மூன்று மாதத்தில் ஒரு நாள் காலையில் வாந்தி எடுத்தார். பிறகு மருத்துவரைப் பார்க்கச்சென்ற போது….

“நல்ல செய்தி”.. தாங்கள் தாய்மை அடைந்திருக்கிறீர்கள்…

என மருத்துவர் வாழ்த்துக்கூறிச் சில வைட்டமின் மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட பரிந்துரை செய்தார்.

அன்று அவரை வாசல்வரை வந்து வழியனுப்பியும் வைத்தார்.

ரஞ்சனா வீட்டிற்கு வந்தபோது இயக்குனரிடம் இருந்து தொலைபேசி.

ரஞ்சனா படம் முடியும் தருவாயில் உள்ளது,

இந்த வாரத்தில் கிளைமேக்ஸ் காட்சி எடுக்கலாம் என நினைக்கின்றேன் உனது சூழல் எப்படி?

நேரம் கிடைக்குமா? என்று கேட்க ரஞ்சனா துடித்து விட்டார்.

சொல்வது என்ன என்று தெரியவில்லை!.

தாய்மை அடைந்த மகிழ்ச்சியில் இவர் இருக்க அந்த காட்சியில் நடிக்க தயங்கினார்.

ஆம்!!

அந்தக் காட்சி எப்படிப் பட்டது.?

மருத்துமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கும் கணவர் இறந்து விடுவதாக எடுக்கப்பட வேண்டிய காட்சி!

அது மட்டுமா?

அவரது இறுதி ஊர்வலத்தில் துயரமாக கண்ணீருடன் நடிக்க வேண்டிய காட்சி.!!

கர்ப்பமாகி மகிழ்ச்சியில் இருக்கும் நேரத்தில் இப்படி ஒரு காட்சியா!!!

என்னதான் நடிப்பு என்றாலும் அவரும் பெண்தானே?

தான் தாய்மை அடைந்துள்ளதால் இந்தக் காட்சியை எடுப்பதைச் சிறிது காலம் தள்ளிப்போட இயலுமா? என்று கேட்க…

டைரக்டர் இன்று மாலை தன்னைப் பார்க்க வருவதாக் கூறித் தொலைபேசித் தொடர்பைத் துண்டித்தார்.

6 மணியைப்போல் டைரக்டர், பழக்கூடையுடன் அவரது வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து ரஞ்சனாவின் வருகைக்கு காத்திருந்தார்.

ஏன் சார் இவ்வளவு தூரம் வந்தீர்கள்?

பரவாயில்லை, உனது “மகிழ்ச்சிக்கு” எனது “வாழ்த்துக்கள்”..

உனது சூழ்நிலை புரிகிறது,

தயாரிப்பாளர் பொங்கலுக்குப் படத்தை வெளியிட இருப்பதால் விரைவில் முடிக்கும்படி கூறியுள்ளார்.

இத்துடன் நீயும் உனது கணவரும் திருப்பதி செல்ல 2 டிக்கெட் மற்றும் அங்கு தங்குவதற்கு ஹோட்டலும் புக் பண்ணிவிட்டேன்.

நாளை புதன்கிழமை இருவரும் திருப்பதி சென்று வாருங்கள்.

பிறகு திங்கட்கிழமை படப்பிடிப்பை வைத்துக் கொள்வோம்.

ஏழுமலையான் எல்லாவற்றையும் நல்லபடியாக பார்த்து கொள்வார்.

கவலை வேண்டாம் எனக் கூறி..

ரஞ்சனா கொடுத்த தேநீரைப் பருகிய பின் கிளம்பினார்.

திங்கட்கிழமை ஸ்டுடியோ செட் தயார் நிலையில் இருக்க..

50 வயதை ஒட்டிய கதாபாத்திரம், மேக்கப்புடன் ரஞ்சனா நடிக்க தயராகிறார்.

காட்சியின் தொடர்பை காட்டும் க்ளாப் அடிக்க… ரெடி, ஸ்டார்ட்,, ஆக்சன்,, கேமிரா என டேக் ஆரம்பமானது.

ரஞ்சனா உண்மையிலேயே மனவேதனையுடன் அந்தக் காட்சியில் நடிக்கத் தொடங்கினார்.

கட்.. கட்.. எனக் காட்சியை நிறுத்தினார்.

“ரஞ்சனா” இந்தக் காட்சி மிக முக்கியமானது,

உனது நடிப்பிற்கு சவால் விடும் இடம்.

இந்தக் காட்சியில் உனது நடிப்பிற்கு விருது கிடைக்க வேண்டும்

அந்த நோக்கத்தில் இந்தக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

எனவே இதில் முழு ஈடுப்பாட்டுடன் நடி. எதையும் நினைக்காதே….

எனக்கூறி மீண்டும்… மீண்டும்….

ரஞ்சனாவிடம் காட்சியை விளக்கி டைரக்டர் நடித்துக் காண்பித்தார்.

இந்தக் காட்சியில் நான் இயல்பான, எதார்த்த நடிப்பை உங்கிட்டே இருந்து எதிர்பார்க்கிறேன். சமரசத்திற்கே இடமில்லை.

எனவே அதிக டேக் பற்றிக் கவலையில்லை…

காட்சியில் கவனம் செலுத்தி நடி என கண்டிப்புடன் கூறி…

.மீண்டும் ரெடி ஸ்டார்ட் ஆக்சன் என இரண்டாவது டேக் தொடர்கிறது

திரும்பவும் கட்.. என்கிறார்.

இந்தமுறை டைரக்டர் முகத்தில் கோபம்.

ரஞ்சனா… .. உனது கவனம் இங்கில்லை!

கவனத்தை சிதறவிடாதே!!.

நான் ஒன்று சொன்னால் நீ ஒன்று செய்கிறாய்?

காட்சியின் விளக்கம் போதவில்லையா?

ஏன் இன்று இப்படி செய்கிறாய்?

நன்றாகக் கவனி! எனது பொறுமையை சோதிக்காதே!!

என மீண்டும் நடித்துக் காண்பித்தார்.

ரெடி ஸ்டார்ட் ஆக்சன் என மூன்றாவது டேக் தொடர்கிறது

கட்.. கட்….

ரெடி.. ஆக்சன்

இது போல் தொடர்ந்து 8 டேக் வரை செல்கிறது.

டைரக்டர் எதிர்பார்த்த வகையில் நடிக்கவில்லை என ரஞ்சனா கவலைப்பட..

டைரக்டர் “பேக்கப்” எனக்கூறிப் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு ஏதும் சொல்லாமல் கிளம்பி விடுகிறார்.

ரஞ்சனா வாடிய முகத்துடன் தனது கேரவானுக்கு திரும்பி மேக்கப்பை கலைத்துக் கொண்டிருக்க ..

டைரக்டர்……. எக்ஸ்கியூஸ் மீ என கேரவனுக்குள் நுழைகிறார்.

நுழைந்ததுமே, என்னை மன்னித்துவிடு..

நீ மூன்றாவது டேக்கில் மிகப்பிரமாதமாக நான் எதிர்பார்த்த வகையில் நடித்து விட்டாய்.

உனது திறமையின் எல்லையைக் காணவே மீண்டும் சில டேக்குகள் எடுக்க வேண்டியிருந்தது.

உனது நடிப்புக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.

அப்படி கிடைக்கலைன்னா எனக்கு இதுவே கடைசிப் படம்.

என்மீது கோபப் படாதே..

இன்றுடன் படப்பிடிப்பு முடிந்து விட்டது. அதனால்தான் “டேக், ஓகே” என்று கூறாமல் “பேக்அப்” எனக் கூறினேன் என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.

டைரக்டர் கணித்தபடியே ரஞ்சனாவிற்கு இப்படத்தின் முலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

இந்தப் படத்தில் நடித்ததற்கு விருது கிடைத்ததில் முழுமையான மகிழ்ச்சி ஏற்ப்படவில்லை.

படம் எடுக்கப்பட்ட சூழலும், டைரக்டர் அவரது நடிப்பை வெளிக்கொணர காட்டிய கண்டிப்பும் கடும் சொற்களும் மனதில் காயமாகி ரணமானது.

இரண்டாவது டேக் முடிந்தபிறகு காட்சியை கோபமாக அவர் விளக்கியபோது அடித்து விடுவாரோ என்ற பயந்தே விட்டார்.. அதனால் அதன் வடு மாறவே இல்லை.

இதன் பிறகு மிகப் பிரபலமாகி திரையுலகின் உச்சத்திற்கே சென்றார்.

அதிக படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் குறிப்பிட்ட படங்களைத் தேர்வு செய்து நடித்தார்.

அவரது 50 வயதில் அந்த எதிபாராத சம்பவம் நடந்தது. அவரது கணவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் போராடி இறந்தும் போனார்.

அவரது இறுதி ஊர்வலம் அரசின் செய்திப் பிரிவில் படமாக்கப்பட்டு நியூஸ் ரீலாய் அந்த வருடம் வெளியானது.

கணவர் இறந்த துயரத்தில் அழுது, அழுது கண்ணீர் வற்றி நிலைமை மோசமாகிவிட்டது.

அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

சில வருடங்களுக்குப் பிறகு மகனுடன் வசிக்க சிங்கப்பூர் வந்துவிட்டார்.

இவரது வாழ்க்கை வரலாறு காணொளியாக்கப் பட்டது. இவரது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் ஆவணப் படுத்தினார்கள்.

அது தற்சமயம் சி.டி.யாக வெளிவந்துள்ளது.

அந்த சி.டி. ஒன்றை மகன் கெளதமன் அம்மாவிடம் கொடுத்து நேரம் கிடைக்கும் போது பார்க்கும்படியும் முக்கிய நிகழ்ச்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதா? என கூறிவிட்டுச் சென்றார்.

ரஞ்சனா அன்று அந்த சிடியை டிவியில் பார்த்துக் கொண்டு இருந்தார்.

அதில் கணவர் இறந்தபோது இறுதிக் காட்சியில் அவர் அழுது புலம்புவதைப் பார்த்து திகைத்து நின்றார்.

.உடனடியாக தனக்குச் சிறந்த நடிகை விருது பெற்ற படத்தின் இறுதிக்காட்சியில் நடித்திருந்ததை பார்க்க வேண்டும் போல் இருந்தது.

அந்தக் காட்சியையும் பார்த்தார்.

மீண்டும் இரண்டையும் பலமுறை ஒப்பிட்டுப் பார்த்தார்.

ஸ்மார்ட் போனில் அவர் நடித்த காட்சியையும் டிவியில் கணவர் இறந்தபோது அவர் அழுவதையும் ஒரே நேரத்தில் பார்க்கிறார்.

குறிப்பிட்ட இடத்தில் இரண்டையையும் நிறுத்தி ஒப்பிட்டுப் பார்க்கிறார்

இரண்டும் வெவ்வேறு காலகட்டத்தில் எடுக்கப்பட்டது.

இரண்டு காட்சிகளிலும் ஆடை மற்றும் மேக்கப் தவிர வேறு எந்த வேறுபாட்டையும் அவரால் உணர முடியவில்லை.

முகபாவனை, அழுவது மற்றும் இயல்பான நடிப்பு நிஜத்துடன் பொருந்தியுள்ளது. எது நிழல்? எது நிஜம்??

என ரஞ்சனாவிற்கு கணிக்க இயலவில்லை

முதல் முறையாக தனக்கு விருது கிடைத்தது சரியானதே என்ற பெருமிதமும் பூரிப்பும்..

ரஞ்சனாவின் கண்களிலிருந்து அவரையும் மீறி வழிந்தது ஆனந்தக் கண்ணீர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *