சிறுகதை

ஆனந்தக் கண்ணீர்…! ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

அவளைப் பார்த்ததும் இத்தனை வலி எனக்கு இருக்குமென்று தெரியாது. அவளின் கண்களைக் கண்டதும், என் கண்களில் ஏன் இவ்வளவு நீர் ஊறுகிறது. வறண்டு வெறித்துக் கிடக்கும் என் விழிகள் அவள் கண்களை இவ்வளவு நேரம் யாசிக்கிறதே? இது எதற்காக? அவள்தான் நம்மை வேண்டாம் என்று சொல்லிப் போய்விட்டாளே? பிறகு எதற்கு நம் இதயம் இவ்வளவு கிடந்து துடிக்கிறது.

நிராகரித்துப் போனவளை நினைத்து என் நெஞ்சம் உடைந்தது உண்மைதான். நீண்ட நாட்களுக்கு பிறகு அவளைச் சந்தித்ததும் என் மனம் ஏன் இவ்வளவு துடித்துக் கிடக்கிறதே? இப்போதும் அவளை என் மனம் நினைத்துக் கொண்டுதான் இருக்கிறதா? காலக் கரையான்கள் நினைவுப் பேழையை அரித்தாலும் ஞாபகப் பூக்கள் நெஞ்சில் பூத்துக்கொண்டே இருக்கிறதே? இதற்குப் பெயர்தான் காதலா? இதயத்தில் விழுந்தவள், இன்று விழிகளில் வந்து நிறைகிறாளே?

இதை என்ன செய்வது? அவளைப் பார்க்காத வரை அவளின் நினைவுகள் என் நெஞ்சத்தில் குடியிருந்தன. இன்று அவளைப் பார்த்து விட்டேன். மறுபடியும் அவளின் சிந்தனைகள் எனக்குள் கூடு கட்டுகிறதே ? அழிக்க முடியாத இந்த ரண அவஸ்தை எதற்கு? ” என்று அதிர்ந்து நின்றான் நிலா ப்ரியன். அவளுக்கும் இந்தப் பிரச்சனை இருக்குமா? என்னைப் போலவே அவளுக்கும் அவள் இதயம் இத்தனை ரணத்தைத் தருமா? ” என் எண்ண அலைகள் இவ்வளவு வேகமாக சுழன்று கொண்டிருப்பதை அவள் அறிவாளா ? என்று துடித்துக் கொண்டே இருந்தான் நிலா ப்ரியன்.

கண்கள் தாரை தாரையாய் கண்ணீரை வடித்துக் கொண்டிருந்தன. தூரத்தில் அமர்ந்து அவளைக் கவனித்துக் கொண்டே இருந்தான். அவள் செய்கை, அவள் சிரிப்பு, அவள் நடவடிக்கை எல்லாம் நிலா ப்ரியனை அவள் மறந்திருப்பாள் என்று தான் தோன்றியது.

“இந்தப் பெண்களே இப்படித்தான். ஒரு அலை வரும்போது, மறு அலை தொடர்ந்து வரும். அலைகள் நிற்கவே நிற்காது. அதுபோல் தான் பெண்களின் மனமும். நாம் அவளின் இதயக்கடலில் ஒரு அலையாக மட்டுமே வந்து தரையில் மோதி காணாமல் போயிருக்கக்கூடும். அவளுக்குள் இதுவரை எத்தனை அலைகள் வந்து போனதோ, யாருக்குத் தெரியும்? ” என்று அவளைப் பற்றிய சிந்தனைகளில் இருந்தான், நிலா ப்ரியன்.

அது ஒரு உயர்தர தேநீர் விடுதி என்பதால் குறுக்கும் நெடுக்கமாக ஆட்கள் சென்று கொண்டிருந்தார்கள். யாரோ ஒருவரிடம் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தவளைப் பார்த்த போது, இவளை நாம் பார்க்காமல் இருந்திருக்க வேண்டும் இன்று பார்த்து விட்டோமே? என்ன செய்வது? பேசலாமா ? வேண்டாமா? என்ற அவஸ்தை அவனுக்குள் ஆட்கொண்டது.

நாம் போய் பேசினால் அது நம் மரியாதையைக் குறைத்து விடும். எவ்வளவோ மறந்து விட்டோம். இதையும் மறக்க மாட்டோமா என்ன? அடிபடும் போது ரணமாக வலிக்கும் காயம் நாளாக நாளாக வலி குறைவது போல அவளின் எண்ணங்கள் நம்மை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக மறையும் நேரத்தில் இந்த நேரம் அவளைச் சந்தித்தது தான் பெரிய பிரச்சனை. தழும்புகள் எல்லாம் காயங்களாக மாறி நம்மை ரசப்படுத்துகிறதே என்று மீண்டும் வருத்தப்பட்டான்.

சரி, இனி இந்த இடத்தை விட்டு நகர்வது தான் நமக்கு நல்லது. சாடை மாடையாகப் பார்த்துக் கொண்டிருக்கும் அவளை மறுபடியும் மறுபடியும் நாம் பார்த்தால் நமக்குத்தான் காயம். எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டிருக்கும் அவளுக்கு நம் வலி இப்போது தெரிய வாய்ப்பில்லை? இனியும் இங்கு அமர்ந்து அவளைப் பார்த்துக் கொண்டிருப்பது சாத்தியமில்லை. இது தவறு என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் நிலா ப்ரியன்.

அவனையும் அறியாமல் அழுதபடியே சென்று கொண்டிருந்தான். அவனுடைய கால்கள் தடுமாறியபடியே நடக்க தொடங்கின. அவளைப் பார்த்த போது ரணம் மட்டுமே மனதில் தங்கி இருந்தது. இப்போது அந்த வலி காயமாக மாறியது. வாய் விட்டு அழுத் தொடங்கினான். திணறித் திணறி அழுது கொண்டே போனவனை

யாரோ ஒருவர் கூப்பிடுவது போல் இருந்தது.

” ஹலோ ? என்ற பெண் குரல் கேட்க

“யார் அது நம்மைக் கூப்பிடுவது? ” என்று திரும்பியும் திரும்பாமல் சாதாரணமாகத் திரும்பிப்பார்த்தான். அங்கு தேவதையாய் அவள் கொண்டிருந்தாள். இருவரும் எதுவும் பேசவில்லை. கண்கள் மட்டுமே பேசிக் கொண்டிருந்தன. இருவரின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. இருவருக்கும் நாகரீகமான இடைவெளி இருந்தது. ஆனால் நான்கு கண்களும் கண்ணீரில் நனைந்து கொண்டிருந்தன. போகிறவர் வருகிறவர்கள் எல்லாம் அவர்களைப் பார்த்துக் கொண்டே சென்றார்கள். இருவரும் அழுது கொண்டே இருந்தார்கள். அதற்கான காரணத்தை அவர்களை கடந்து போகிறவர்கள் ஆளுக்கு ஒரு காரணத்தைப் பேசிக்கொண்டே சென்றார்கள். இருவர் அழுகையும் நிற்கவே இல்லை.

அதற்கு காரணம் என்ன என்பது அந்த இரு இதயங்களுக்கு மட்டும் தானே தெரியும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *