செய்திகள்

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது

தெலுங்கு தேசம் கட்சி போராட்டம்

ஐதராபாத், செப். 9–

ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று காலையில் கைது செய்யப்பட்டார்.

சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்த காலத்தில், மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்கு சட்டவிரோதமாக 118 கோடி ரூபாய் பெற்றதாக சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் விசாரணை நடைபெற்ற நிலையில் சந்திரபாபு நாயுடுவை போலீசார் இன்று கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் நந்தியாலா பகுதியில் நேற்று கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற சந்திரபாபு நாயுடு தனது வாகனத்தில் இரவு ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது, இன்று அதிகாலை 3 மணியளவில் நந்தியாலா போலீஸ் டிஐஜி தலைமையில் அதிக அளவிலான போலீசார் சந்திரபாபுவை கைது செய்ய சென்றனர்.

அதிகாலையில் கைது

ஆனால், அங்கு கூடியிருந்த தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல், சந்திரபாபு நாயுடு எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படைப்பிரிவின் பாதுகாப்பில் உள்ளதால் சட்டப்படி அதிகாலை 5.30 மணிவரை அவரை அழைத்து செல்ல அனுமதிக்க முடியாது என்று எஸ்பிஜி படைப்பிரிவினர் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து காத்திருந்த போலீசார், சந்திரபாபு நாயுடுவை காலை 6 மணிக்கு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு விஜயவாடா அழைத்து செல்லப்பட்டார். ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து யுவகளம் என்ற பெயரில் ஆந்திராவில் பாதயாத்திரை மேற்கொண்டு இருக்கும் அவருடைய மகன் லோகேஷ், தந்தையை சந்திப்பதற்காக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பொடலாடாவிலிருந்து புறப்பட்டு சென்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில் லோகேஷ் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *