செய்திகள்

ஆந்திர காங்கிரஸ் தலைவரான ஒய்.எஸ். ஷர்மிளாவின் வீட்டில் முதலமைச்சர் ஜெகன் மோகன்

ஐதராபாத், ஜன. 19–

ஆந்திர காங்கிரஸ் கட்சியின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள ஒய்.எஸ்.ஷர்மிளா வீட்டு நிகழ்ச்சியில், ஆளும் ஒய்.எஸ்.ஆர்.கட்சி தலைவரும், ஷர்மிளாவின் அண்ணனும் முதலமைச்சருமான ஜெகன் மோகன் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேச அரசியல் களத்தில் ஒரு காலத்தில் தமையனுக்குப் பக்க பலமாக இருந்த தங்கையே தற்போது, நேரெதிராகக் களமிறங்கியிருக்கிறார். முதலில், தெலங்கானாவில் தனிக் கட்சித் தொடங்கிய ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, நடந்த முடிந்த தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து தேர்தலிலிருந்து விலகினார். அதன் பின்னர், காங்கிரஸ் தெலங்கானாவில் வெற்றிபெற்றது.

அதைத்தொடர்ந்து, ஆந்திராவிலும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் எனக் காங்கிரஸ் எண்ணிக்கொண்டிருந்த வேளையில், நீண்ட ஆலோசனைக்குப் பிறகு காங்கிரஸில் இணைந்தார் ஷர்மிளா. அண்ணனுக்கு எதிராகக் களமிறங்கிய ஷர்மிளா, ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இவ்வாறு, அரசியல் களத்தில் அண்ணன் தங்கை இருவரும் எதிரெதிர் துருவங்களாக தற்போது நிற்கின்றனர்.

இணைந்து நின்ற துருவங்கள்

இந்த நிலையில், அரசியல் வேறு, குடும்பம் வேறு என்ற வகையில் தங்களின் குடும்ப நிகழ்ச்சியில் இருவரும் ஒரே மேடையை அலங்கரித்திருக்கின்றனர். நேற்றைய தினம், ஐதராபாத்தில் ஷர்மிளாவின் மகனுக்கு நிச்சயதார்த்தம் நிகழ்வு நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஏற்கெனவே, ஜெகன்மோகன் மோகன் ரெட்டியின் வீட்டுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்தார் ஷர்மிளா.

தற்போது, அதற்கேற்றவாறு தன் மனைவி பாரதியுடன் நேற்று நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜெகன்மோகன், தன் தங்கை மகன் ஒய்.எஸ்.ராஜாவையும், அவருக்கு மனைவியாக வரவிருக்கும் அட்லூரி பிரியாவையும் வாழ்த்தினார். அதோடு, ஜெகன்மோகன் தன்னுடைய தாய் மற்றும் தங்கையைக் கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்திய புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இவ்வாறு நிகழ்ச்சி நன்றாக நடந்து முடிந்தாலும்கூட, கடந்த சில மாதங்களாக ஜெகன்மோகனுக்கும், ஷர்மிளாவுக்கும் இடையிலான குடும்ப உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக எழும் பேச்சுகளைத் தவிர்ப்பதற்காக இந்த நிகழ்ச்சிக்கு ஜெகன்மோகன் ரெட்டி நேரில் வந்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *