செய்திகள் முழு தகவல்

ஆந்திரா, தெலுங்கானாவில் தொடரும் கனமழையால் 140 ரெயில்கள் ரத்து

Makkal Kural Official

ஐதராபாத், செப் 2

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் கனமழை பெய்ததையடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட விஜயவாடா நகருக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். மீட்பு, நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார்.தொடரும் கனமழையால் 140 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த மண்டலமாக மாறியதை அடுத்து, ஆந்திரா, ஒடிசா, தெலுங்கானா மாநிலங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

விஜயவாடா, குண்டூர், கிருஷ்ணா, அமராவதி, மங்களகிரி, ஏலுாரு, பாபட்லா, என்.டி.ஆர். உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றும், இன்றும் கனமழை பெய்து வருகிறது. முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது. முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ரெயில், வாகன போக்குவரத்தும் முடங்கியுள்ளது.

மழை, வெள்ளம் காரணமாக 294 கிராமங்களில் இருந்து, 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். விஜயவாடாவில் மட்டும் 2.76 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆந்திரா மழை வெள்ளத்தால் இதுவரை 1,11,259 ஹெக்டேர் அளவிலான வேளாண் பயிர்களும், 7,360 ஹெக்டேர் அளவிலான தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்துள்ளன. மாநிலம் முழுவதும் நேற்று 28 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

கனமழை மற்றும் வெள்ள பாதிப்பில் சிக்கி மொத்தம் 27 பேர் பலியாகி உள்ளனர். இவற்றில் தெலுங்கானாவில் 15 பேரும், ஆந்திர பிரதேசத்தில் 12 பேரும் உயிரிழந்து உள்ளனர்.

கனமழையால் சார்மினார் விரைவு ரெயில், கோரமண்டல் விரைவு ரெயில், சென்னை – புதுடில்லி விரைவு ரெயில் உள்ளிட்ட 140 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. மேலும் 97 ரெயில்கள் திருப்பிவிட்டப்பட்டுள்ளன. சுமார் 6000 பயணிகள் பல்வேறு ரெயில் நிலையங்களில் சிக்கியுள்ளனர்.

தெலுங்கானாவில் இன்றும் மிதமான மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் இன்று மாநிலம் முழுவதும் அரசு, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. பல்வேறு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஐதராபாத்தின் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் ஒஸ்மானியா பல்கலைக்கழக தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில் இன்று நடைபெறவிருக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. மற்ற தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும். இன்று ஒத்திவைக்கப்படும் தேர்வுக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்றார். இதற்கிடையில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆகியோரை தொலைபேசி

யில் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மழை, வெள்ள பாதிப்பு நிலவரங்களைக் கேட்டறிந்ததோடு மத்திய அரசு தேவையான உதவிகளைச் செய்யும் என்று உறுதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, கனமழை வெள்ளத்தால் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. விஜயவாடா வெள்ளக் காடாகியுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். மாநில அரசு மழை பாதிப்பிலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்க அனைத்து வகையிலும் உதவிக்கரம் நீட்டி வருகிறது என்றார். மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏற்கெனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

விஜயவாடாவில் நேற்று பின்னிரவில் ஆய்வைத் தொடங்கிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாலை 3 மணி வரையிலும் படகில் சென்றும், நடந்து சென்றும் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். பாதுகாப்பு நிலவரங்களையும் பொருட்படுத்தாமல் முதல்வர் ஆய்வில் ஈடுபட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *