செய்திகள்

ஆந்திராவில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு வெளியிலிருந்து மக்கள் உணவுகளை கொண்டு செல்ல மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அனுமதி

ஆந்திரா, ஜன.11–

ஆந்திராவில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு வெளியிலிருந்து மக்கள் உணவுகளை கொண்டு செல்ல மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

திரையரங்குகளுக்கு வரும் பொதுமக்கள் வெளி உணவுகளை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை. இதனால், அங்கு பலமடங்கு விலையில் விற்கப்படும் உணவு பொருள்களை அவர்கள் வாங்க வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும் உணவுப்பொருட்களில் அச்சிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையான எம்.ஆர்.பி-க்கு அதிகமாக உணவு பொருட்கள் விற்கப்படுகிறது.

திரையரங்குகளில் உள்ள கேன்டீனில் உணவுப்பொருட்களில் அதிகமாக பொருட்கள் விற்கப்பட்டால், அந்தந்த மாவட்டங்களில் உள்ள சட்டத் துறை துணை கட்டுப்பாட்டு அதிகாரியிடம் புகார் செய்ய வேண்டும்.

வெளி உணவுகளுக்கு அனுமதி

இந்நிலையில் திரையரங்குகளில் அதிக விலைக்கு தண்ணீர், கூல்டிரிங்க்ஸ் உள்ளிட்டவை விற்கப்படுவதாகவும் திரையரங்குகளுக்குள் உணவுப் பொருட்களை கொண்டு போகலாம் அல்லது கொண்டு போகக் கூடாது என்று சட்டத்தில் கூறப்படவில்லை எனவும் விளக்கி ஜெயேந்திரா பக்சி என்பவர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனுவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தின் தலைவர் ரவிபள்ளி மாதவ ராவ், உறுப்பினர்கள் பி.சீனிவாசு, ஆர்.சீதாராமம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு தண்ணீர், கூல்டிரிங்க்ஸ், நொறுக்குத்தீனி உள்ளிட்ட உணவு பொருட்களை எடுத்துச்செல்லலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ரூ.5லட்சம் அபராதம்

நீதிமன்றம் பிறபித்த உத்தரவில் மேலும் கூறியிருப்பதாவது :–

எம்.ஆர்.பி. விலையை விட அதிக விலைக்கு தண்ணீர், கூல்டிரிங்க்ஸ் ஆகியவற்றை விற்பனை செய்த நிறுவனங்களுக்கு ரூ.5லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் எம்.ஆர்.பி. விலையை விட அதிக விலைக்கு உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது.

பொதுமக்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்க வேண்டும். இந்த உத்தரவை 2 மாதத்திற்குள் செயல்படுத்த வேண்டும். சட்டத் துறை அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

வெளி உணவுகளைத் திரையரங்குகளுக்குள் எடுத்து செல்ல மகாராஷ்டிர அரசு ஏற்கனவே அனுமதியளித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *