செய்திகள்

ஆந்திராவில் தர்கா முன்பு இறந்த பிச்சைக்காரரிடம் ரூ.3 லட்சம் பணம்

Spread the love

ஐதராபாத்,ஜூன்.27–

ஆந்திராவில் தர்கா முன்பு 12 வருங்களாக பிச்சை எடுத்து இறந்தவரின் பையில் இருந்த ரூ.3 லட்சம் பணத்தை போலீசார் தர்கா நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.ஆந்திர மாநிலம் அனந்தபுர் மாவட்டம் குஜ்நக்கல் பகுதியில் உள்ள தர்கா முன்பு பஷீர் (75) என்பவர் பிச்சை எடுத்து வந்தார். தர்காவுக்கு வருபவர்கள் பஷீருக்கு பணம் கொடுப்பார்கள். மேலும் உணவுகளையும் கொடுத்து வந்தனர். பிச்சை எடுத்த சில்லறை காசுக்களை இரவு அங்குள்ள கடைக்காரர்களிடம் கொடுத்து ரூபாய் நோட்டுகளாக வாங்கி வைத்து கொள்வார். இரவு தர்கா முன்பே படுத்து தூங்குவார்.

இந்த நிலையில் நேற்று காலை பஷீர் நீண்ட நேரமாக எழுந்திருக்கவில்லை. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அவர் தூங்குவதாக நினைத்தனர். ஆனால் மாலை வரை அவர் எழுந்திருக்காததால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் பஷீரை தட்டி எழுப்பினர். அப்போது அவர் இறந்து இருப்பது தெரிய வந்தது. கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர் உடல்நிலை மோசமானதன் காரணமாக இறந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து பஷீர் வைத்திருந்த பையில் அவரது உறவினர்களின் விவரம் ஏதாவது இருக்கிறதா? என்று பார்த்தனர். அப்போது பையில் ஏராளமான ரூபாய் நோட்டுகள் இருந்தன. மொத்தம் ரூ.3 லட்சத்து 22 ஆயிரத்து 676 பணம் இருந்தது. 12 ஆண்டுகளாக தர்கா முன்பு பிச்சை எடுத்து வந்த பஷீர் யாரிடமும் பேசமாட்டார். தான் சித்தூரை அடுத்த மதனப்பள்ளியில் இருந்து வந்ததாக மட்டுமே அங்குள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் அவரை பற்றிய மற்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து அவரது உடலை தர்கா நிர்வாகத்தினரே அடக்கம் செய்தனர். பஷீரிடம் இருந்த ரூ.3 லட்சம் பணத்தை தர்கா நிர்வாகத்திடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *