அமராவதி, மே 19–
ஆந்திராவில் காருக்குள் விளையாடி கொண்டிருந்த அக்கா, தங்கை உள்பட 4 குழந்தைகள் மூச்சு திணறி உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் கன்டோன்மென்ட் துவாரபுடியில் உதய் (வயது 8), சாருமதி (8), சரிஷ்மா (6), மானஸ்வி(6) ஆகிய குழந்தைகள் 4 பேரும் தெருவில் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது அதே பகுதியில் உள்ள மகளிர் மன்ற அலுவலகத்தில் ஒரு கார் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனை பார்த்த குழந்தைகள் காரில் ஏறி கதவை உள்பக்கமாக மூடிக்கொண்டு விளையாடினர். காருக்குள் காற்று போகாததால் சிறிது நேரத்தில் 4 பேருக்கும் ஆக்சிஜன் பற்றாக்குறையால், மூச்சு திணறல் ஏற்பட்டது. குழந்தைகள் கார் கதவை திறக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் கதவை திறக்க முடியவில்லை. இதனால் அவர்கள் காருக்குள் இருந்து கதறி அழுது கூச்சலிட்டனர். கார் கதவு மூடப்பட்டு இருந்ததால் அவர்களின் சத்தம் வெளியில் யாருக்கும் கேட்கவில்லை. சிறிது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு 4 பேரும் காருக்குள்ளேயே உயிரிழந்தனர்.
3 மணி நேர தவிப்பு
விளையாடச் சென்ற சிறுவர், சிறுமிகள் நீண்ட நேரமாக வீட்டிற்கு திரும்பாததால் அவர்களது பெற்றோர்கள் அக்கம் பக்கம் என பல்வேறு இடங்களில் தேடினார்கள். 3 மணி நேரத்திற்கும் மேலாக எங்கு தேடியும் குழந்தைகள் கிடைக்கவி்ல்லை.
இந்த நிலையில் மகளிர் மன்ற அலுவலகத்தில் இருந்த காரை பார்த்தபோது அதில் மயங்கிய நிலையில் 4 குழந்தைகள் இருப்பதைக கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து கார் கண்ணாடி உடைக்கப்பட்டு குழந்தைகள் மீட்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்த போது, மூச்சு திணறி 4 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள். இறந்தவர்களில் சாருமதி, சரிஷ்மா ஆகிய இருவரும் சகோதரிகள். இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
2 நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்து அந்த பகுதியில் காரை நிறுத்திவிட்டு சரியாக பூட்டாமல் சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. காரின் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அந்த பகுதியில் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அம்மாநில அமைச்சர் கொண்டப்பள்ளி ஸ்ரீனிவாஸ், மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என குறிப்பிட்டார். இந்தப் பிரச்சினையை அரசு கையில் எடுத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் என்று அவர் உறுதியளித்தார். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கூடுதல் கவனத்துடன் கவனித்து அவர்களை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்