சென்னை, ஜூன் 21–
ஆந்திராவில் செயல்படாத ரசாயன நிறுவனங்களில் இருந்து காலாவதியான மெத்தனாலை புதுச்சேரி வழியாக தமிழகம் கொண்டுவரப்பட்டு, சாராயத்தில் கலந்து விற்றது சிபிசிஐடி விசாரணையில் அம்பலமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராயம் விற்றதாக கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, கோவிந்தராஜ் சகோதரர் தாமோதரன், சின்னதுரை உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். கள்ளச்சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி.,க்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சிபிசிஐடி.,யின் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சின்னதுரையிடம் நடத்திய விசாரணையில், ஆந்திராவில் உள்ள செயல்படாத ரசாயன நிறுவனங்களில் இருந்து காலாவதியான மெத்தனாலை, மாதேஷ் என்பவர் வாங்கி வந்துள்ளார். காலாவதியான மெத்தனாலை, நல்ல சரக்கு எனக்கூறி சின்னதுரைக்கு விற்றுள்ளார்.
இவை ஆந்திராவில் இருந்து புதுச்சேரி வழியாக பல்வேறு சோதனைச் சாவடிகளை கடந்து விற்பனைக்கு தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த காலாவதியான மெத்தனாலை சாராயத்தில் கலந்து சின்னதுரை விற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.