திருப்பூர், ஜூன் 28–
ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு கடத்திவரப்பட்ட 7½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பெண் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு அதிக அளவில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாதேவி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமாஅனிதா, கிரிஜா, ஏட்டுகள் சுரேஷ், முகமதுசபி, சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர் ரெயில் நிலையம் எதிரே உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்ற பெண் உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரிக்கையில் ஒருவர் மட்டும் தப்பி ஓடினார். அவரையும் பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. மொத்தம் 7 கிலோ 600 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. ஆந்திராவில் இருந்து 3 பேரும் மொத்தமாக வாங்கி ரெயில் மூலமாக வந்து திருப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர். விசாரணையில் அவர்கள் தேனியை சேர்ந்த முருகேஸ்வரி (வயது 49), கேரள மாநிலம் ஆனைக்கட்டி பகுதியை சேர்ந்த அமீர் (38), கோழிக்கோட்டை சேர்ந்த முகமது சபிர் பாஷா (23) என்பது தெரியவந்தது. இவர்களில் முருகேஸ்வரி, அமீர் ஆகியோர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மாநகர மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் 7 கிலோ 600 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து முருகேஸ்வரி, அமீர், முகமது சபிர் பாஷா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
#கள்ளக்குறிச்சி #போதை #கள்ளச்சாராயம்