சென்னை, பிப். 3–
ஆந்திராவில் இருந்து 160 கிலோ கஞ்சா கடத்தி வந்த வழக்கில் இருவருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, சென்னை போதை பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி ஆந்திராவில் இருந்து இருவர் 160 கிலோ கஞ்சா கடத்தி வருவதாக சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, சென்னை மாதவரம் அருகே ஒரு வாகனத்தை வழிமறித்து போலீசார் சோதனையிட்டதில், 8 மூட்டைகளில் 160 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ரங்கநாதன், வேலூரைச் சேர்ந்த செல்வம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.திருமகள், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் அளவு சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறி, இருவருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.