செய்திகள்

ஆந்திரம், கர்நாடகம், புதுவையில் இருந்து வருவோருக்கு இ–பாஸ் தேவையில்லை: தமிழக அரசு

சென்னை, ஏப்.10–

ஆந்திரம், கர்நாடகம், புதுவையில் இருந்து வருவோருக்கு இ–பாஸ் தேவையில்லை என்றும் பிற மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து வருவோர் கட்டாயம் இ–பாஸ் முறையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. மேலும் பிற மாநிலங்களிலும் தொற்று அதிகரித்து வருவதால் தமிழகம் வருவோரைத் தீவிரமாகக் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோர் தங்களது விவரங்களை தமிழக அரசின் இணையதளத்தில் பதிவு செய்த பிறகே பயணத்தைத் தொடங்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.

இதற்கான பிரத்யேக இணையதளத்தில் விவரங்களைப் பதிவு செய்யும் நடைமுறை ஏற்கெனவே இருந்தாலும் இப்போது தொற்று அதிகரித்து இருப்பதால் அதனைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:–

வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து வருவோர் தங்களது அனைத்து விவரங்களையும் தமிழக அரசின் பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில், தனிநபர் வாகனம், ரெயில், விமானம் மூலமாக வருவோருக்கென தனித்தனியாகப் பக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழகம் வருவதற்கான பிரத்யேக காரணம், தமிழகத்தில் பயணம் செய்யும் இடம், விண்ணப்பதாரர் பெயர், பாலினம், உடன் பயணிப்போரின் எண்ணிக்கை ஆகிய விவரங்களைப் பதிவிட வேண்டும்.

மேலும், விண்ணப்பதாரர் தனது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாகன ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண், கடவுச் சீட்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும். தனிநபர் வாகனமாக இருந்தால் வாகனத்தின் எண்ணைக் குறிப்பிட வேண்டும்.

ரெயில், விமானம் மூலம் பயணிப்பவராக இருந்தால், பயணச் சீட்டின் நகலைப் பதிவேற்றம் செய்வதுடன், அதனுடைய எண், ரெயில் அல்லது விமானத்தின் எண், ரெயில் பெட்டியின் எண், இருக்கையின் எண் ஆகிய விவரங்களை இணையதளத்தில் அதற்கான உரிய இடத்தில் தெரிவிக்க வேண்டும். இந்த விவரங்களைப் பதிவு செய்த பிறகு அதற்கான அனுமதிக்காகக் காத்திருக்கத் தேவையில்லை. விவரங்கள் அனைத்தையும் பதிவு செய்த பிறகு வெளி மாநிலங்கள், வெளி நாடுகளைச் சோ்ந்த பயணிகள் தங்களது பயணத்தைத் தொடங்கலாம்.

இணைய வழியிலான பதிவு முறையில் இருந்து தமிழகத்துக்கு அருகிலுள்ள மூன்று மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திரம், கா்நாடகம், புதுவை ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர் இ–பாஸ் முறையைப் பின்பற்றத் தேவையில்லை. அவர்கள் தங்களது மாநிலங்களில் இருந்து புறப்பட்டு வழக்கம் போல் தமிழகம் வந்து சேரலாம் என்று கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *