சுந்தரேசன் சென்னையில் ஒரு பெரிய தொழிலதிபர். செராமிக், கிளாஸ், பேப்பர் மில் என்று பல்வேறு துறைகளிலும் அவர் முன்னணித் தொழிலதிபராக விளங்கினார். மேலும் அவர் மேற்கொண்ட தொழில் திறமை அவரை உயர்த்திக் கொண்டே போனது.
அவருக்கு சுதன் என்ற மகனும் சுகந்தி என்ற மகளும் இருந்தனர். மனைவி இளம் வயதிலேயே இறந்து விட்டாள். தன் 2 குழந்தைகளையும் திறமையுடனும் நல்லவராகவே வளர்த்து வந்தார். மகன் தன்னைப் போலவே தன் தொழிற்சாலைகளை கவனித்து வரப் பழக்கினார்.
மகன் சுதனும் தன் தந்தையைப் போலவே பொறுப்புடன் நிர்வாகத்தை கவனித்து வந்தான்.
சுந்தரேசனுக்கு தன் மகள் சுகந்தியை ஒரு பெரிய தொழிலதிபர் வீட்டில் திருமணம் செய்து கொடுக்கத் திட்டமிட்டார். அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டார்.
அவர் பங்களா தோட்டத்தைப் பராமரிக்க வடிவேலு என்ற பணியாளை நியமித்திருந்தார். அவனுடைய மகன் சம்பத் ஒரு விவசாயத்துறை பட்டதாரி. அவன் ஊரில் உள்ள ஒரு நிலத்தில் விவசாயத்தைக் கவனித்து வந்தான். அவ்வப்போது தன் தந்தையைப் பார்க்க பங்களாவுக்கு வருவது உண்டு. அவனைக் கவனித்த சுகந்திக்கு அவன் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அவன் வரவை ஆவலுடன் எதிர்பார்த்தாள். சிறிது காலத்தில் அது காதலாகக் கனிந்தது. திருமணம் அவனுடன் தான் என்பதில் சுகந்தி முனைப்பாக இருந்தாள்.
சுந்தரேசன் தன்னைப் போல் தொழிலதிபர் மகனைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் சுகந்தி அந்தப் பையனை மணமுடிக்க மறுத்து விட்டாள். தான் தோட்டக்காரன் மகன் சம்பத்தையே மணமுடிக்க விரும்புதாகச் சொன்னாள். அதில் அவள் உறுதியாகவும் இருந்தாள்.
சுந்தரேசன் கோபம் கொண்டு கொதித்தெழுந்தார். எவ்வளவோ வாதாடியும் தன் தந்தையை மனதை மாற்ற முடியவில்லை. ஒரு நல்ல முகூர்த்த நாளில் நிச்சயதார்த்தம் நடந்தது. ஒரு நாள் சம்பத் வீட்டிற்கு வந்தபோது நடந்ததை விளக்கினாள். தன்னை எப்படியாவது இந்த இக்கட்டிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று சம்பத்திடம் முறையிட்டாள்.
சுகந்தியிடம், ‘எங்கள் கிராமத்திற்கு ஓடி வந்து விடு. மனம் போல் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்று யோசனை சொன்னான். சுகந்திக்கும் இது சரியான யோசனையாகப் பட்டது. தான் தன் தோழியைப் பார்க்க தாமரைக்குளம் கிராமத்திற்குச் செல்வதாக கடிதம் எழுதிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினாள்.
இதைப் படித்த சுந்தரேசன் கொதித்துப் போய்விட்டார். வேதனையின் உச்சத்திற்கே போய் விட்டார். தன் மகள் சுகந்தி தன் சிநேகிதியை பார்க்கப் போன இடத்தில் ஆற்றுவெள்ளம் அடித்துச் சென்று விட்டதாக அனைவரிடமும் சொல்லி விட்டார். அங்கேயே அவளுக்கு ஈமக்கிரியையும் செய்து விட்டதாக எல்லோரிடமும் சொல்லி விட்டார். அத்துடன் அவளை அவர் நினைவிலிருந்தும் அகற்றி விட்டார்.
சம்பத்தும் சுகந்தியும் திருமணம் செய்து மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தார்கள். ஒரு மகனும் மகளும் பிறந்தனர். காலம் வேகமாக உருண்டோடியது.
சுந்தரேசன் வயது முதிர்ச்சியால் வீட்டிலேயே இருக்க நேரிட்டது. ஒரு நாள் சுகந்தி தந்தையிடம் தன் மகனின் திருமணப் பத்திரிகையைக் கொடுக்க நினைத்தாள்.
பத்திரிகையை வீட்டின் வெளியே இருந்த ஒரு காவலாளியிடம் தந்து முதலாளியைப் பார்க்க சுகந்தி என்ற பெண் வந்திருப்பதாக் கூறினாள். வீட்டின் முன் அறையில் அவளின் பெரிய புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. அதன் அடியில் ‘‘ஆத்தோடு போனவள்’’ என்றும் எழுதப்பட்டிருந்தது.
பத்திரிகையைப் பார்த்ததும் சுந்தரேசன் கம்பீரமான குரலில் கத்தினார். இங்கே எதற்கு வந்தாள் என்று உறுமினார். பயந்து போன காவலாளி வேகமாக வெளியேறிவிட்டான். சுகந்தி ஜன்னலை மட்டும் சிறிது திறந்து பார்த்தாள். அப்பா அவள் கொடுத்த பத்திரிகையை பார்த்து மாறிமாறி முத்தமிட்டார். நெஞ்சோடு அணைத்துக் கொண்டார். பாசம் மிக்க கண்ணீர் சொரிந்தார். சுகந்திக்கு தன் மீது தன் தந்தை கொண்ட அன்பும், பாசமும் புரிந்தது. இது போதும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு தந்தையைப் பார்த்த மகிழ்ச்சியுடன் வெளியேறினாள் சுகந்தி.
அவள் தீர்மானித்தாள் ‘‘என்றும் சிங்கமாகவே இருக்கட்டும் அந்த சீறும் சிங்கம்’’
என்றும் இந்த சுகந்தி ‘ஆத்தோடு போனவள் போனவளாகவே இருக்கட்டும்’’ என்று அந்த பங்களாவை விட்டு வெளியேறினாள் தன் அப்பாவை சந்திக்காமலேயே.