செய்திகள்

ஆதித்யா–எல் 1 விண்கலத்தின் செயல்பாடு நன்றாக உள்ளது: இஸ்ரோ அறிவிப்பு

பெங்களூரு, அக். 8–

ஆதித்யா எல்–1 விண்கலம் செயல்பாடு நன்றாகவும் சரியான பாதையிலும் சென்று கொண்டிருக்கிறது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி–57 ராக்கெட் மூலம் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா–எல் 1 என்ற விண்கலம், கடந்த மாதம் 2ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

பூமியில் இருந்து 125 நாட்கள் பயணம் செய்து விண்கலம் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் புள்ளி–1ஐ சென்றடையும். அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் விண்கலம் ஈடுபடும். விண்கலம் பூமியைச் சுற்றி வரும் போது 5 முறை சுற்றுப்பாதையின் அளவு உயர்த்தப்பட்டது. விண்கலம் தற்போது பூமியின் ஈர்ப்பு மண்டலத்தில் இருந்து விலகி வெற்றிகரமாக ‘லாக்ராஞ்சியன் புள்ளி–1ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் ஆதித்யா–எல் 1 விண்கலத்தின் செயல்பாடு நன்றாக உள்ளது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, எக்ஸ் சமூகவலைதளத்தில் இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஆதித்யா எல்-1 விண்கலம் செயல்பாடு நன்றாகவும் சரியான பாதையிலும் சென்று கொண்டிருக்கிறது. சூரியனின் எல் 1 புள்ளியை நோக்கி ஆதித்யா எல்–1 விண்கலம் திட்டமிட்டப்படி பயணிக்கிறது. ஆதித்யா விண்கலத்தை ஹாலோ சுற்றுப்பாதை நோக்கி செலுத்துவதற்கான பணிகள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஹாலோ பாதைக்கு விண்கலத்தை மாற்றம் செய்வதற்கான பணிகள் அக்டோபர் 6ல் 16 விநாடிகள் வெற்றிகரமாக நடந்தன.

ஆதித்யா எல்–1 தொடர்ந்து முன்னோக்கி நகர்வதால், காந்த புலமையை அளவிடும் கருவி சில நாட்களுக்குள் மீண்டும் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *