செய்திகள்

ஆதிதிராவிடர் இனத்தவர்களின் இறப்புக்கு ஈமச்சடங்கு மானியம்; விடுபட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை: முதல்வர் உறுதி

சென்னை, பிப். 12

ஆதிதிராவிடர் இனத்தவர்களின் இறப்புக்கு ஈமச்சடங்கு மானியம் வழங்குவதில் யாரும் விடுபட்டிருந்ததாக அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தால், அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இன்று (12 ந் தேதி) சட்டசபையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் இனத்தவர்களின் இறப்புக்கு ஈமச்சடங்கு மானியம் வழங்குவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

அதன் விவரம் வருமாறு:

நேற்றையதினம் எதிர்க்கட்சி துணைத் தலைவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஈமச்சடங்கு நிதி சரியாக போய் சேரவில்லை என்ற ஒரு கருத்தை இங்கே சொன்னார். அதற்கு விளக்கத்தை தர விரும்புகின்றேன்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் இனத்தவர்களில் எவரேனும் இறந்தால் அவரின் இறுதிச் சடங்கு செலவுகளுக்காக இறந்தோரின் குடும்பத்திற்கு ரூ.2,500 வழங்கப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு ஆதிதிராவிட நலத் துறைக்கு ஆண்டுதோறும் 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது.

இத்திட்ட நிதியினை ஊரக வளர்ச்சித் துறை, பேரூராட்சி நிர்வாக இயக்குநரகம், நகராட்சி நிர்வாக ஆணையரகம் மற்றும் சென்னை, மதுரை, ஈரோடு, சேலம், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், கோயம்புத்தூர், திருப்பூர் மாநகராட்சிகளுக்கும் நிதி பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

2018 19 ம் ஆண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 கோடி ரூபாயில் இதுவரை 4.67 கோடி ரூபாய் உதவித்தொகை 18,692 நபர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதை எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு தெரிவித்துக்கொள்கின்றேன். ஏதேனும் ஈமச்சடங்கு நிதி முறையாக வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை சொல்லியிருக்கின்றார், அப்படி ஏதாவது புகார் வந்தால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த ஈமச்சடங்கு நிதி உரியவர்களுக்கு உரிய நேரத்தில் கொடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை தங்கள் வாயிலாக எதிர்க்கட்சிதுணைத் தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

2018 19 ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி 5 கோடி ரூபாய். ஆகவே, அதிலே மீதி இருக்கின்றது. 4.67 கோடி ரூபாய் தான் செலவழிக்கப்பட்டு இருக்கின்றது. 18,692 நபர்கள் அதற்கு மனு செய்திருக்கின்றார்கள், விண்ணப்பம் செய்திருக்கின்றார்கள். இறந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ஈமச்சடங்கு நிதி வழங்கப்படுகின்றது. உறுப்பினர், ஏதேனும் விடுபட்டிருந்தால், அவர்கள் அதை அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வந்தால், அவர்களுக்கு உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை எதிர்க்கட்சிதுணைத் தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதே உள்ளாட்சித் துறை. நான் ஏற்கனவே சொன்னதைப் போல ஊரக வளர்ச்சித் துறை, பேரூராட்சி நிர்வாக இயக்குனரகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் மாநகராட்சியை சேர்ந்த அதிகாரிகள் தான், இந்த ஈமச்சடங்கு நிதியை அளிக்கின்றார்கள். ஆகவே, அதில் குறைபாடுகள் இருந்தால், நீங்கள் சுட்டிக்காட்டினால், யாருக்காவது ஈமச்சடங்கு நிதி கிடைக்க பெறாமல் இருந்தால், அவர்களுக்கு நிதி கிடைக்கப் பெறுவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதை எதிர்க்கட்சிதுணைத் தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *