புதுடெல்லி, மார்ச்.29-
பான் – ஆதார் எண்கள் இணைப்புக்கான கால அவகாசத்தை மேலும் 3 மாதம் நீட்டித்து, ஜூன் 30-ஐ கடைசி தேதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நிரந்தர கணக்கு எண் (பான்)-ஆதார் எண்களை உரிய கட்டணம் செலுத்தி, மார்ச் 31-ந் தேதிக்குள் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, பான்-ஆதார் எண்கள் இணைப்புக்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு, அதாவது வருகிற ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் ‘வரி செலுத்துவோருக்கு மேலும் கால அவகாசம் வழங்கும்வகையில் பான் – ஆதார் எண்கள் இணைப்புக்கான கடைசி தேதி ஜூன் 30 ஆக மாற்றப்பட்டுள்ளது. அந்த தேதிக்குள், குறிப்பிட்ட ஆணையத்தில் ஆதார் எண்ணை தெரிவிக்கலாம். வருமானவரி சட்டத்தின்படியான பின் விளைவுகளையும் தவிர்க்கலாம்’ என்று அறிவித்துள்ளது.
மேலும் ஜூன் 30-ந் தேதிக்குள் ஆதாருடன் இணைக்காதவர்களின் பான் எண் ஜூலை 1-ந்தேதி முதல் செயலிழந்துவிடும். அதன் பிறகு 30 நாட்களுக்குள் ரூ.1000 செலுத்தினால் பான் எண் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும். இதுவரை 51 கோடி பான் எண்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.