சென்னை, நவ. 19–
ஆதனூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மாடம்பாக்கம் ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 48). இவர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் வெங்கடேசன், நேற்று முன்தினம் இரவு ஆதனூர் மெயின் ரோடு ராகவேந்திரா நகர் பகுதியில் வார்டு உறுப்பினர் சத்தியநாராயணன் மற்றும் ராமலிங்கம் ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 5-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மீது ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து 3 நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் 2 குண்டுகள் வெடிக்கவில்லை. ஒரு வெடிகுண்டு வெடித்ததில் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமானது. ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மர்ம நபர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக சிலம்பு நகர் பகுதியில் ஓடினார். ஆனால் அந்த 5 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து விடாமல் துரத்திச் சென்று வெங்கடேசனை கழுத்து, முகம் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வீச்சரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து 5 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார், கொலையான வெங்கடேசன் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி தலைமையிலான போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசார் விடிய விடிய சோதனை நடத்தி முகமது சதாம் உசேன் (வயது 25), முகமது இம்ரான் கான் (வயது 21), முகமது ரியாசுதீன் (வயது 27), தனுஷ் (வயது 26), மணிமாறன் (வயது 25), அகமது பாஷா (வயது 21), மோகன் ராஜ் (வயது 20) அவரது சகோதரர்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், மணிமங்கலம் பகுதியில் இரட்டை கொலைக்கு மூளையாக இருந்து வெங்கடேசன் செயல்பட்டதால் பழி தீர்க்க கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.