வைதேகிக்கு வயது 32 .ஆனால் அவளுக்கு இன்னும் திருமணமாகவில்லை. செவ்வாய் தோஷமாே புதன் தோஷமோ எந்த தோஷமும் அவளுக்கு இல்லை.
ஆனால் அவளுக்கு வரன் அமையாது தான் அவள் குடும்பத்தில் இருந்தவர்களுக்கு வருத்தமாக இருந்தது . காரணம் வரதட்சிணை தர முடியாத ஏழைக் குடும்பத்தில் பிறந்ததால் அவள் முதிர் கன்னியாகவே வாழ்ந்து கொண்டிருந்தாள்.
இத்தனைக்கும் அவள் லட்சணமானவள் தான் .காதல், கீதல் என்று எந்த வம்பு தும்புக்கும் போகாமல் இருந்ததால் அவள் கழுத்தில் இன்னும் மாலை ஏறாமல் இருந்தது. இல்லை என்றால் எவனையாவது இழுத்துக் கொண்டு போய் இந்நேரம் இரண்டு மூன்று குழந்தைகளுக்கு தாயாகி இருப்பாள். குடும்பம் மானம் காற்றில் பறந்து விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக அவள் கன்னியாய் இன்னும் இருக்கிறாள்.
அவள் வீட்டில் இருந்தால் இதையே பேசிக் கொண்டிருப்பார்கள் என்று ஒரு ஜவுளிக்கடையில் விற்பனை பிரதிநிதியாக வேலைக்கு சேர்ந்தாள்.
விரிந்து பரந்த அந்த ஜவுளிக்கடையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை துணிகள் விற்பனை செய்து கொண்டிருந்தார்கள்.
முகூர்த்த புடவை நிச்சயதார்த்தப் புடவை எடுக்க வரும் ஆட்களை பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு உள்ளுக்குள் உறுத்தல் இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வாள்.
ஆயிரம் கனவுகள், லட்சம் பறவைகள் அவள் நெஞ்சுக்குள் சிறகு விரித்து சிறகு விரித்து பறக்கும். விரிந்த சிறகுகள் எல்லாம் சில நொடிகளில் அவளே சுருக்கிக் கொள்வாள்.
அந்தக் கடையில் பொம்மைகளுக்கு துணிகள் உடுத்தி வெளியே வைத்திருப்பார்கள். குழந்தை பொம்மை, பெண்கள் பொம்மை ஆண்கள் பொம்மை என்று அத்தனை பொம்மைகளுக்கும் அன்று புதிதாக வந்த உடைகளில் நல்ல உடையை தேர்ந்தெடுத்து அதை அணிந்து வெளியே வைக்கும் வழக்கம் அந்தக் கடையிலிருந்தது.
ஒவ்வொரு முறை கடையை திறக்கும் போதும் கடையை மூடும் போதும் அந்த ஆண் பொம்மையை கடை திறக்கும் போது வெளியில் வைப்பதும் கடையை மூடும் போது அந்த ஆண் பொம்மையை தூக்கி உள்ளே வைப்பதும் தான் வைதேகிக்கு இட்ட பணி .
மற்ற விற்பனையாளர்கள் எல்லாம் அந்தப் பொம்மையைத் கூட தொட மாட்டார்கள் . குழந்தை பொம்மைகள் ஆண் பொம்மை இது இதை மட்டுமே எடுத்து வைக்க வேண்டும் என்பது அவளுக்கு இட்ட கட்டளை.
பொம்மைகளைத் தூக்கி உள்ளே வைக்கும் போது அவளுடைய உள்ளத்துக்குள் ஆனந்த பிரவாகம் எடுக்கும் . இப்படி ஒரு கணவன் இருந்தால் நமக்கும் இந்த பொம்மைகள் போலவே குழந்தைகள் பிறந்திருக்கும்.
என்ன செய்ய என் விதி? என்று உள்ளுக்குள் நாெந்து கொள்வாள் வைதேகி. அவளுடன் வேலை பார்க்கும் மற்ற பெண்களும் ஆண்களும் கூட அவள் தூக்கி வைக்கும் அந்த பொம்மைகளை பார்த்து கிண்டல் செய்வார்கள்.
அதையெல்லாம் கண்டு கொள்ள மாட்டாள் வைதேகி.
ஒரு நாள் அந்த ஆண் பொம்மையைத் தூக்கி வைக்கும் போது தவறுதலாக கீழே விழுந்து உடைந்து விட்டது.
மற்றவர்களுக்கு அது பொம்மையாகத்தான் தெரிந்தது ஆனால் வைதேகி அந்த பொம்மையைத் தன் துணையாகவே பாவித்து இருந்தாள். ஆளில்லாத நேரங்களில் அந்தப் பொம்மைகள் மீது தோள் போட்டுக் கொள்வது. அந்த பொம்மையை தன் கணவனாக பாவித்து கொள்வது சுற்றி இருக்கும் குழந்தை பொம்மைகளை தனக்குப் பிறந்த குழந்தைகளாக எண்ணியபடியே வேலைசெய்து கொண்டே ஒரு கனவுலகத்திலே வாழ்ந்து கொண்டிருந்தாள் வைதேகி.
அந்தப் பொம்மை உடைந்து போனதும் யாருக்கும் தெரியாமல் அவள் அழுத அழுகைக்கு அளவே இல்லை . அவள் பொம்மை உடைந்ததிலிருந்து அவளின் முகம் ஒரு மாதிரியாக இருப்பதைக் கண்டுபிடித்த தோழிகள்
என்ன பொம்மை ஒடஞ்சு போச்சுன்னு கவலையா இருக்கே? என்று கிண்டல் செய்தார்கள்.
இல்ல என்று அவள் ஒற்றை வார்த்தையில் சொன்னாலும் அவள் உள்ளத்தை மறைத்துதான் சொல்கிறாள் என்பது அங்கு இருப்பவர்களுக்கு தெரியும்.
ஆனால் இவ்வளவு ஆழமாக அந்தப் பொம்மைக்குள் அவள் அன்பு வைத்திருக்கிறாள் என்பது அவர்களுக்கு தெரியாது.
உடைந்த பொம்மையை இன்று வாங்கி விடுவார்கள்; நாளை வாங்கி விடுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.
ஆனால் அவர்கள் ஆண் பாெம்மையை வாங்கவே இல்லை. ஒரு முறை இரு முறை சொல்லி பார்த்தாள். கடைக்காரர்கள் வாங்குவதாக தெரியவில்லை.
ஒரு வாரத்திற்குள் ஒரு ஆண் பொம்மையை வைதேகி வாங்கி வந்து கடையில் வைத்து ஒவ்வொரு நாளும் அதற்கு உடை உடுத்தி அழகு பார்த்தாள் .
இது கடைக்காரர்களுக்கு மற்றவர்களுக்கும் வியப்பாகத் தெரிந்தது.
சரி நம் வியாபாரத்திற்கான விளம்பரம் தான் வைதேகி செய்கிறாள். நமக்கு எதிராக எதுவும் செய்யவில்லை என்று எண்ணிக் கொண்டு மேற்கொண்டு எதுவும் பேசாமல் இருந்தார்கள்.
என்றும் இல்லாமல் அன்று வைதேகி வீட்டிற்கு மாப்பிள்ளை வீட்டார் பெண் வீடு பார்ப்பதற்காக வந்தார்கள்.
எப்போதும் போல இவர்களும் வரதட்சிணை வித்தியாசம் என்று கேட்டு விட்டு சென்று விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த வைதேகி குடும்பத்தாருக்கு வைதேகியைப் பார்த்ததும் வந்தவர்கள் வரதட்சிணையே வேண்டாம் பெண் கொடுத்தால் போதும் என்று சொன்னார்கள்.
அவர்களுக்கு அவ்வளவு ஆனந்தம் வைதேகி திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொண்டு வாழ வேண்டும் என்பதை விட இந்த சமூகத்தில் இருந்து ஏன் இவள் கல்யாணம் செய்யாமல் இருக்கிறாள்? என்ற கேள்வியிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றுதான் அவள் திருமணத்தை நினைத்து இருந்தாள்
இன்று அது கைகூடி இருந்தது. ஆனால் வைதேகி பார்த்த மாப்பிள்ளை எங்கோ பார்த்தது போல் அவளுக்கு ஞாபகம் தட்டியது.
ஆனால் எதுவும் பிடிபடவில்லை
உங்கள நான் எங்கேயோ பார்த்திருக்கேன் என்று மாப்பிள்ளை இடமே கேட்டு விட்டாள்.
இல்லங்க நான் வெளியூர். என்னை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க என்று மாப்பிள்ளை மறுத்தார்.
இல்லங்க நான் உங்களை எங்கேயோ பார்த்திருக்கேன் என்றாள் வைதேகி.
அவள் உள்ளத்திற்குள் வந்த மாப்பிள்ளை யாராக இருக்கும் என்று அந்த இரவு முழுவதும் நினைத்துக் கொண்டே தூங்கிப் போனாள்.
மறுநாள் வழக்கம் போல ஜவுளிக்கடையில் பொம்மையை எடுத்து வைத்து திரும்பும்போது தான் அவளுக்கு தெரிந்தது.
தான் தினமும் நேசிக்கும் அந்த பொம்மையைப் போலவே மாப்பிள்ளை இருக்கிறார் என்று. அவள் அடைந்த ஆனதற்கு ஆனந்தத்திற்கு அளவே இல்லை.
அந்த பொம்மையை ஒரு சேர கட்டிக்கொண்டு அழுதாள். அந்தச் சாலை வழியே போவோர்களுக்கும் கடையில் வேலை செய்பவர்களுக்கும் ஏன் வைதேகி இப்படி அழுகிறாள்? என்று தெரியவில்லை .
அவளுக்கு மட்டும் தான் தெரியும் அந்த ஆண் பொம்மையின் அர்த்தம் .