புதுடெல்லி, ஜூலை 23–
ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
மேலும் புதிய நடைமுறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு நிரந்தர கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளை மத்திய பட்ஜெட் தாக்கலின்போது அவர் வெளியிட்டுள்ளார்.
வருமான வரி தொடர்பான அறிவிப்புகள்
* புதிய கணக்கு தாக்கல் முறையில் ரூ.3 லட்சம் வரை வருமான வரி பிடித்தம் கிடையாது.
* ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரை 5 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படும்
* ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை 10 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.
* ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சம் வரை 15 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.
* ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சம் வரை 20 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.
* 15 லட்சத்திற்கும் மேல் 30 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.
வருமான வரி தாக்கல் செய்யும் நடைமுறை மேலும் எளிமையாக்கப்படும்.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்பரேட் வரி 40 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக குறைக்கப்படும்.
தொழில் முதலீட்டிற்கான ஏஞ்சல் வரி முற்றிலுமாக நீக்கப்படுகிறது-
அறக்கட்டளைகளுக்கு நன்கொடை அளிப்பதற்கு ஒரே வரி முறை அறிமுகம் செய்யப்படும். இதுவரை இருந்த 2 வரி முறைகள், ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே வரி முறை நடைமுறைப்படுத்தப்படும்.
கிரிமினல் குற்றமில்லை
தாமதமாக வருமான வரி தாக்கல் செய்வது இனி கிரிமினல் குற்றமாக கருதப்படாது.
இணைய வர்த்தகத்திற்கான டி.டி.எஸ் குறைக்கப்படும்.
நேரடி வரி விதிப்பை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பிட்ட சில முதலீடுகளுக்கு 20 சதவீதம் குறுகிய மூலதன ஆதாய வரி விதிக்கப்படும்.
பலன் அடையும்
4 கோடி ஓய்வூதியதாரர்கள்
அனைத்து வகை முதலீட்டாளர்களுக்கான ஏஞ்சல் வரி நடைமுறை ரத்து செய்யப்படுகிறது
இந்தியாவில் சொகுசு கப்பல் இயக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்படும்.
குடும்ப பென்ஷன் திட்டத்தின் மீதான நிலையான கழிவு ரூ.15,000-ல் இருந்து ரூ. 25,000 ஆக உயர்வு. இவற்றின் மூலம் 4 கோடி வருமானதாரர்கள், ஓய்வூதியர்களுக்கு பலன் பெறுவார்கள்.
ரூ.14 லட்சம் கோடிகள்
நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரூ.14 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.