செய்திகள்

ஆண்களின் ‘தலாக்’ முறை போலவே பெண்களின் ‘குலா’ முறை செல்லும் : கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு

திருவனந்தபுரம், ஏப். 17–

இஸ்லாமில், மனைவிகளின் சம்மதமின்றி ஆண்கள் விவாகரத்து செய்யக் கூடிய தலாக் முறையை போலவே, கணவர்களின் சம்மதமின்றி, பெண்களும் குலா முறையில் விவாகரத்து செய்து கொள்வது சட்டப்படி செல்லும் என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தங்களுக்கு விருப்பம் இல்லை என்றால், தங்கள் மனைவிகளை ‘தலாக்’ முறையில் விவாகரத்து செய்து கொள்வது முஸ்லிம்களிடையே வழக்கம். இதை வாபஸ் பெறுவதற்கு கணவன்–மனைவி இருவரும் நகராட்சியின் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அவ்வாறு நடத்தப்படும் பேச்சுவார்த்தை மூன்று கட்டமாக நடைபெறும். இதிலும் சேர்ந்து வாழ விரும்பாவிட்டால், இருவரும் நிரந்தரமாக பிரிய வேண்டும்.

முஸ்லீம் ஆண்களுக்கு எப்படி தலாக் முறையில் மனைவிகளை விவாகரத்து செய்யக் கூடிய சட்டம் உள்ளதோ, அதேபோல பெண்கள் ஆண்களை ஒருதலைப்பட்சமாக விவாகரத்து செய்து கொள்வதற்கு குலா எனும் சட்டமும் உள்ளது. இதன்படி முஸ்லிம் பெண்கள் தங்கள் கணவரை பிரிய வேண்டுமானால், குலா முறையில் ஒருதலைப்பட்சமாக தாங்களே விவாகரத்து செய்து கொள்ளலாம்.

‘குலா’ முறை செல்லும்

கேரளாவில் 31 வயதுடைய ஒரு முஸ்லிம் பெண், தனது கணவரை குலா முறையில் விவாகரத்து செய்துள்ளார். ஆனால், இதை அவரது கணவர் ஏற்காமல், இதற்கு அவரது மனைவிக்கு உரிமை இல்லை என்று குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை எதிர்த்து அவரது மனைவி ஏர்ணாகுளம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த வழக்கு போலவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததால், இவை அனைத்தையும் மொத்தமாக விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, ஆண்களுக்கு எப்படி தலாக் முறையில் விவாகரத்து செல்லுமோ அதேபோல பெண்களுக்கு இந்த குலா முறையில் விவாகரத்து செல்லும் என தீர்ப்பளித்துள்ளது.

மேலும் இது குறித்து பேசி உள்ள நீதிபதிகள், இஸ்லாமியர்களிடையே கணவன் மனைவி இருவருக்கும் ஒரு தலைபட்சமாக விவாகரத்து அளிப்பதற்கான உரிமை உள்ளது என அம்மதத்தின் புனித நூலான குரானிலேயே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே முஸ்லிம் பெண்களுக்கான குலா முறையும் செல்லும் என தீர்ப்பளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *