சென்னை, ஜன. 28–
சென்னை அண்ணாநகரில் ஆட்டோவில் தவறவிட்ட ரூ. 8 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை ஒன்றரை மணி நேரத்தில் போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை, அண்ணாநகர், 7வது மெயின் ரோடு பேஸ் என்கிளேவ் அப்பார்ட்மென்ட்டைச் சேர்ந்தவர் கோடீஸ்வரி (வயது 64). நேற்று மாலை 4.30 மணியளவில் கோடீஸ்வரி தனது மகள் அஸ்மிதா மற்றும் கணவர் பிரசன்ன வதனம் ஆகியோருடன் சென்னை, திநகர், ஜிஆர்டி தங்கமாளிகைக்கு நகை வாங்குவதற்காக சென்றார். அங்கு சுமார் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகளை வாங்கிக் கொண்டு அங்கிருந்து ஆட்டோ பிடித்து மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்று விட்டு மாலை 6 மணிக்கு வீடு திரும்பினார்.
இறங்கும் போது ஆட்டோவின் பின்புறம் வைத்திருந்த நகைப்பையை எடுக்க மறந்து விட்டார். ஆட்டோ டிரைவரும் அங்கிருந்து சென்று விட்டார். வீட்டுக்குள் வந்த போதுதான் ஆட்டோவில் நகைகளை தவறவிட்டது தெரியவந்தது. அது தொடர்பாக கோடீஸ்வரி உடனடியாக சென்று அண்ணாநகர் போலீசில் 6.30 மணிக்கு புகார் அளித்தார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தனசேகர் அது தொடர்பாக விசாரணை நடத்தினார். சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து ஆட்டோவின் பதிவெண்ணை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதில் ஆட்டோ ஓட்டுநர் ஆவடி, காமராஜர் நகரைச் சேர்ந்த வெங்கடேசன் (36) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தொடர்பு கொண்டு பேசிய போது நகை பத்திரமாக இருப்பதாவும், கோயம்பேடு மேம்பாலம் அருகில் நிற்பதாகவும் ஆட்டோ டிரைவர் தெரிவித்தார். அதனையடுத்து போலீசார் அந்த இடத்திற்கு சென்று தங்க நகைகளை இரவு 8 மணியளவில் மீட்டு கோடீஸ்வரியிடம் ஒப்படைத்தனர்.
நகையை மீட்டுக் கொடுத்த போலீசாருக்கு கோடீஸ்வரி குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். ஒன்றரை மணி நேரத்தில் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள நகைகளை மீட்டுக் கொடுத்த அண்ணாநகர் போலீசாரை கமிஷனர் சங்கர்ஜிவால் வெகுவாக பாராட்டினார்.