செய்திகள்

ஆட்சியைக் கவிழ்க்க துடிக்கும் ஸ்டாலினின் திட்டங்கள் பலிக்காது

கோவை, மே 14–
ஆட்சியை கவிழ்க்க துடிக்கும் ஸ்டாலினின் திட்டங்கள் பலிக்காது என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் கூறினார்.
சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிடும் வி.பி.கந்தசாமியை ஆதரித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முன்னிலையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சூலூர், நீலாம்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
எம்.ஜி.ஆர். உருவாக்கிய அண்ணா தி.மு.க.வை ஜெயலலிதா வழிநடத்தினார். தற்போது அவர் இல்லையே என்ற ஏக்கத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீர்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாதையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறந்த முறையில் மக்களுக்காக சேவை செய்து வருகிறார் என்றால் அது மிகையாகாது. தொலைநோக்கு பார்வையுடன் மக்களுக்காக நான் என்று ஜெயலலிதா பயணித்ததுபோல, எடப்பாடி பழனிசாமி மக்களை பற்றி சிந்தித்து சிறந்த முறையில் ஆட்சி செய்து வருகிறார்.
உதாரணமாக 70 ஆண்டு காலம் நடைபெறாமல் இருந்த அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை செயல்படுத்தியவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்படிப்பட்ட சிறந்த ஆட்சியை கலைக்க துடிக்கும் ஸ்டாலினின் குறுக்குவழி திட்டங்கள் ஒருபோதும் நிறைவேறாது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறுகிறார். தி.மு.க. என்றும் ஆட்சிக்கு வர முடியாது. ஸ்டாலின் முதல்வராகவும் முடியாது. ஊழலில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தவர்கள் திமுகவினர். அராஜகத்தின் உச்சகட்டமாக திமுகவினர் சாதாரண பிரியாணி கடைக்கு சென்று அடிதடி நடத்துகிறார்கள். அவதூறாக பேசுகிறார்கள்.
தற்போது நடைபெறும் 4 இடைத்தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும். அந்த வெற்றி தற்போது உறுதி செய்யப்பட்டு விட்டது. கண்டிப்பாக 4 தொகுதிகளிலும் அண்ணா தி.மு.க. வெற்றி பெறும். பதவி சுகம் அனுபவித்தவர்கள்தான் தற்போது தேர்தலை உருவாக்கி இருக்கிறார்கள். மு.க.ஸ்டாலினுடன் கூட்டு சேர்ந்து இருக்கிறார்கள்.
பதவி தான் முக்கியம்
மு.க.ஸ்டாலினுக்கு வேண்டியது எல்லாம் முதல்-அமைச்சர் என்ற பதவிதான். மக்களை பற்றி அவர் சிந்திக்கவில்லை. காற்றாலையையும் காசாக்க முடியும் என்று ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தது அவர்கள்தான். அராஜக ஆட்சியை நடத்தியவர்களும் அவர்கள்தான். இந்த தேர்தல் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஸ்டாலின் கூறுகிறார். 23-ந் தேதி அன்று எங்கள் ஆட்சி வரும் என்று அவர் சொல்கிறார். அவரால் எப்போதுமே ஆட்சிக்கு வர முடியாது.
அண்ணா தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு இல்லை. சிறந்த முறையில் ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சி தொடர வேண்டும் என்றால் நீங்கள் விவசாய குடும்பத்தை சேர்ந்த வி.பி.கந்தசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரசாரத்தின்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வேட்பாளர் வி.பி.கந்தசாமி, சூலூர் ஒன்றிய கழக செயலாளர் தோப்பு க.அசோகன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் தோப்பு க.அசோகன், பொள்ளாச்சி நகர செயலாளர் தம்பி கிருஷ்ணகுமார், மாணவர் அணி மாவட்ட செயலாளர் ரகுபதி, சூலூர் பேரூராட்சி கழக செயலாளர் கார்த்திகைவேலன், கூட்டுறவு தலைவர் ஏ.பி.அங்கண்ணன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.
முன்னதாக கோவை விமான நிலையத்தில் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
4 சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறேன். 13-ந்தேதி (இன்று) அரவக்குறிச்சியிலும், 15-ந்தேதி திருப்பரங்குன்றத்திலும், 16, 17-ந் தேதிகளில் ஓட்டப்பிடாரம் தொகுதிகளிலும் பிரசாரம் செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *