” இது தான் ஆச்சாள்புரமா?”
என்று அந்த ஊரில் இறங்கியவுடன் உள்ளூர்வாசி ஒருவரிடம் கேட்டான், சத்யா.
அவனை மேலும் கீழும் பார்த்த உள்ளூர்வாசி ஒருவர்..
” ஆமாங்க. நீங்க யாரப் பாக்கணும் ? “
என்று சில பெயர்களைச் சொன்னார், அவர் பேசுவதைக் கேட்ட சத்யா
“, இல்லங்க . எனக்கு இங்க யாரையும் தெரியாது. “
என்று திருதிருவென விழித்தான். அப்படிப் பார்த்துக் கொண்டிருந்த சத்யாவைப் பார்த்தவர்
” பெறகு எதுக்காக இங்க வந்திங்க? “
என்று கேட்க,
” நான் ஒரு புத்தகம் படிச்சேன் . அதில இருக்கிறது எல்லாம் உண்மையான்னு பாக்க வந்தேன் “
என்று சத்யா சொல்ல
” என்ன புத்தகம்? “
என்று கேட்டார், அந்த ஊர்க்காரர்.
” தஞ்சாவூர் பத்தின ஒரு புத்தகம் “
என்றான், சத்யா.
” ம். சொல்லுங்க “
” கர்ணாமிருத சாகரம் படிச்சேன்.காவிரி நதி பாயுற ஊர். எங்க பாத்தாலும் கோயில். நெல் வயல். இது எல்லாம் எனக்கு வியப்ப தரல. இன்னொரு விசயம் தான் எனக்கு பெரிய ஆச்சர்யமா இருக்கு. தஞ்சாவூர் மைந்தன் நாதஸ்வர சக்ரவர்த்தி திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை பத்தி படிச்சேன். அவர் நாதஸ்வரம் பத்தி கேள்விப்பட்டிருக்கேன். ரொம்ப வியப்பா இருக்கு “
என்று சத்யா சொல்ல, அதை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார், உள்ளூர்காரர்.
” இன்னொரு விசயம் சொல்றேன்”
“ம்”
” 1947 , ஆகஸ்ட் 15 ல தில்லி தர்பார் மண்டபத்தில சுதந்திர தின விழா, பிரதிநிதிகளா திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை , நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ரெண்டு பேரும் கலந்திருக்காங்க”
“ம்”
“நேரம் இல்லன்னு நிகழ்ச்சிய வேண்டாம்னு சொல்ல , இல்ல ராஜரத்தினம் பிள்ளை வாசிக்கட்டும்னு சொல்லியிருக்காங்க. அவர் வாசிச்ச ஆரம்பிச்சதும் தர்பார் மண்டபமே இசையில சாெக்கிப் போச்சாம். அப்படிப்பட்ட நாதஸ்வர வித்வான் பெறந்த ஊர். அது மட்டுமில்ல இன்னொரு பெரிய ஆச்சர்யம் இருக்கு. அத பாக்கத்தான் இங்க ஆசையா வந்தேன் “
என்று சத்யா சொல்ல
” என்ன சொல்லுங்க “
” எனக்கு இன்னும் ஆச்சர்யம். நாதஸ்வரம் இந்த மண்ணில இருந்து தான் உருவாகுதுன்னு நினைக்கும் போது, பெரிய ஆச்சர்யமா இருக்கு. வேற எங்கயும்இது நடக்காது போல . காவேரி படுகையில தான் நாதஸ்வரத்துக்கான சீவாளி தயாரிக்கப்படுதுன்னா எவ்வளவு ஆச்சர்யம் இது. ‘
என்று சத்யா சொல்ல,
‘ ஆமாங்க எங்களுக்கே இது ரொம்ப ஆச்சர்யம். இங்க விளையற நாணல் ல இருந்து தான் அதுவும் கொள்ளிடக்கரை ல இருக்கிற ஆச்சாள்புரம்ங்கிற நாதஸ்வரம். குழல். வீணை ன்னு இசைக் கருவிகளத் தயாரிக்கிறாங்க. இது ஒலகத்தில எந்த இடத்திலயும் இது நடக்காது. இது பெரிய ஆச்சர்யம் என்று அந்த ஊர்க்காரர் சொல்ல,
‘ ஆமாங்க, இத தான் நான் பாக்க வந்தேன். “
என்றான் சத்யா
” சரி வாங்க போகலாம். அப்ப நீங்க மனுசங்க யாரையும் பாக்க வரல. “
என்று சத்யாவை நாதஸ்வரம் தயாரிக்கும் இடத்திற்கு கூட்டிச் சென்றார் அந்த உள்ளூர்காரர்.
ஆச்சர்யத்துடன் நடந்தான் சத்யா.
எங்கிருந்தோ நாதஸ்வரச் சத்தம் கேட்க ஆரம்பித்தது.