சிறுகதை

ஆசை துரை.சக்திவேல்

Spread the love

கோவில் திருவிழா களை கட்டத் தொடங்கியது. ஊர் முழுவதும் மா இலை தோரணங்களும் வாழை மரங்களும் கட்டப்பட்டு. ஆங்காங்கே ஆடல், பாடல்கள் நடந்து கொண்டிருந்தன.
மக்கள் குடும்பம் குடும்பமாக கோவிலுக்கு வந்து கொண்டிருந்தனர்.
ஆங்காங்க டிப்–டாப் உடையணிந்து கண்ணில் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு இளைஞர்கள் கூட்டம் நின்று கொண்டு அங்கு வரும் இளம் பெண்களை கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.
பட்டப்படிப்பை முடித்து தனது தந்தையின் சிபாரிசு மூலம் அந்த ஊரில் உள்ள பஞ்சு ஆலையில் சூப்ரவைசர் வேலையில் சேர்ந்திருந்த ரமேஷ், டிப்–டிப்பாக உடையணித்து தன் நண்பன் முரளிக்காக காத்துக் கொண்டிருந்தான்.
ஒரே தெருவில் இவர்கள் இரண்டு பேர்களின் குடும்பமும் காலம் காலமாக வசித்து வந்ததால் பள்ளி படிப்பு முதல் கல்லூரி வரை அவர்கள் இரண்டு பேரும் ஒன்றாகவே படித்த நெருங்கிய நண்பர்கள் .
தலையில் கைக்குட்டையை கட்டிக் கொண்டு, கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு வெள்ளை பேண்ட்டும் பஞ்சு மிட்டாய் கலரில் ஜிலு ஜிலு என்ற சிவப்பு சட்டை அணிந்து தனது மோட்டார் சைக்கிளில் வந்தான் முரளி.
தனது நண்பனை பார்த்த உற்சாகத்தில் மோட்டார் சைக்கிளை பிடித்து வந்த இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி அங்கிருந்த இளம் பெண்களின் கவனத்தை ஈர்க்க சாகம் செய்தபடி வந்தான்.
அவன் வந்த அந்த ஸ்டைலை பார்த்து கைதட்டிய நண்பர்கள் ஒரு பக்கம்…. வேலை வெட்டி எதுவும் கிடையாது… வெட்டி பந்தாவுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை என்று முணங்கிய பெரியவர்கள் பலர்.
உடனே ரமேஷ், என்ன முரளி ரொம்ப குஷியா வந்திருக்க திருவிழாவே உனக்காகவே நடக்கிறது மாதிரி தெரியுது என்றான்.
ஆமாம் ரமேஷ்… இந்த வருஷம் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு என்ற தனது தலையிலிருந்த கைக்குட்டியை எடுத்து சட்டை காலரில் திணித்தான் முரளி.
என்ன விஷயம் சொல்லு என்று ஆவலாக கேட்டான் ரமேஷ்.
ஊரிலிருந்து எங்க அம்மாவின் தூரத்து சொந்தமா மாமா குடும்பம் வந்திருக்காங்க. மாமா பொண்ணும் செல்வி வந்திருக்கா.
அந்த பொண்ணு பார்க்க சூப்பரா இருக்கிறா. கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கிறாளாம் என்று இழுத்தான் முரளி.
என்ன தம்பி பொண்ணை பார்த்ததும் மயங்கிட்டயா…
ஆமாம் ரமேஷ். அந்த பொண்ணை பார்த்ததும் எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு.
எனக்கு மட்டும் உன்னை மாதிரி ஒரு நல்ல வேலை கிடைச்சிருச்சின்னா… அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிடலாம்னு நினைக்கிறேன் என்று தனது மனதில் இருந்த ஆசைகளை தனது நண்பன் ரமேஷிடம் கூறினான் முரளி.
திருவிழா கலை கட்டியது. நண்பர்கள் கோவிலை சுற்றிச் சுற்றி வந்தனர்.
மற்றொரு பக்கம் முரளியின் குடும்பத்தினரும் ஊரிலிருந்து வந்த உறவினர்களுடன் கோவிலுக்கு வந்தனர்.
அப்போது ரமேஷின் குடும்பத்தினரும் கோவிலுக்கு வந்தனர்.
ஒரே தெருவில் வசித்தாலும் கோவிலுக்கு வந்தவுடன் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.
அப்போது ரமேஷின் குடும்பத்தினருக்கு ஊரிலிருந்து வந்தவர்கள் அறிமுகம் செய்து வைத்தார் முரளியின் தாயார்.
இளம் பெண் செல்வியை பார்த்ததும் ரமேஷின் அம்மாவுக்கு ரொம்ப பிடிச்சது.
தனது மகனுக்கு இந்த பொண்ணை கல்யாணம் பண்ணி வைத்தால் நல்லா இருக்கும் என்று மனதில் தோன்றியது.
உடனே அருகில் நின்று கொண்டிருந்த தனது கணவரிடம் ‘‘ என்னங்க… இந்த பொண்ணு ரொம்ப அழகா, லட்சணமா இருக்கா. இவள் நம்ம குடும்பத்துக்கு ஏத்த மருமகளா இருப்பான்னு எனக்கு தோனுது என்று கூறினார்.
அவரது கணவரும் நீ சொன்னா சரிதான் என்று ஆமாம் போட்டார்.
கோவில் வாசலிலேயே ரமேஷின் தாய், முரளியின் தாயிடம் தனது மனதில் தோன்றியதைக் கூறி, கல்யாணப் பொண்ணு வீட்டில் கேட்கச் சொன்னார்.
ரமேஷ் பட்டம் படித்து பஞ்சுமில்லில் சூப்ரவைசர் வேலையில் இருப்பதாலும் பையனும் நல்ல குணம் என்பதாலும் சரி அக்கா, பேசி முடிச்சிடலாம். நான் வீட்டுக்கு போனதும் அவங்ககிட்ட கேட்டுட்டு உங்களுக்கு தகவல் கொடுக்கிறேன் என்று வாக்கு கொடுத்தார்.
ரமேஷின் குடும்பத்திற்கு ரொம்ப சந்தோஷமாகியிடுச்சு.
பையனுக்கு கூடிய சீக்கிரம் கல்யாணம் நடக்க போகுதே என்று கடவுளை மீண்டும் கும்பிட்டு விட்டு வீட்டுக்கு புறப்பட்டனர்.
அங்கு முரளியும் ரமேஷும் திருவிழா கொண்டாட்டத்தில் இறங்கினார்கள்.
அவ்வப்போது முரளி, தனது மாமா மகள் செல்வியின் அழகை வர்ணித்துக் கொண்டே, அவன் மட்டும் எனக்கு கிடைச்சுட்டா… என் வாழ்க்கையே சூப்பிராகிவிடும் என்று தனது கற்பனையை நண்பன் ரமேஷிடம் கூறிக்கொண்டே வந்தான்.
ரமேஷும் நண்பா உனக்கு அந்த செல்விக்கும் நானே கட்டாயம் கல்யாணம் நடத்தி வைக்கிறேன் என்று வாக்கும் கொடுத்தான்.
ஒரு பக்கம் ரமேஷ் குடும்பத்தினர் செல்வியை தனது வீட்டுக்கு மருமகளாக்க பேச்சு நடத்த தொடங்கினர்.
மறுபக்கம் ரமேஷ் செல்வியை தனது நண்பனுக்கு திருமணம் செய்து வைப்பதாக உறுதி கூறினான்.
திருவிழா முடிந்தது.
அனைவரும் வீட்டுக்கு திரும்பினர்.
ரமேஷ் வீட்டுக்குள் வந்ததும் அவனது அம்மா, தம்பி உனக்கு ஒரு சந்தோஷமான செய்தி.உனக்கு பொண்ணு பார்த்திருக்கோம் என்று கூறினர்.
ரமேஷ்க்கு வெட்கம் வந்தது ‘‘அம்மா… எனக்கு எதுக்கு இப்ப கல்யாணம்’’ என்று உதட்ட அளவு வார்தையால் கூறினான்.
அடே பொண்ணு ரொம்ப அழகா இருக்க. உனுக்கு ரொம்ப பொருத்தமாக இருப்பாள் என்று அந்த பொண்ணின் அழகை அம்மா வர்ணிப்பதை கேட்டதும் ரமேஷ்…. எல்லாம் உங்க இஷ்டம் என்று சிரித்துக் கொண்டே கூறினான்.
மனதில் வண்ணத்து பூச்சிகள் சிறகடிக்க தொடங்கின.
மெல்ல தன் அம்மாவிடம் யாரும்மா பொண்ணு என்று கேட்டான் ரமேஷ்.
அது வந்துடா.
உன் நண்பன் முரளியோட உறவுக்கார பொண்ணு. ஊரிலிருந்து திருவிழாவுக்கு வந்திருக்காங்க. அவள் பெயர் செல்வி என்று சொல்லும் போது ரமேஷின் இதயத்தில் வெடிகுண்டு வெடித்தது போல் இருந்தது.
உடனே தனது அம்மாவிடம்…. அந்த பொண்ணு தனக்கு வேண்டாம் என்றான்.
அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் பொண்ணு வேண்டாம் என்று சொல்கிறாய் என்று கேட்டனர்.
அம்மா முரளி அந்த பொண்ணை தான் கல்யாணம் பண்ணனும்னு மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறான். என் நண்பனுக்கு பிடித்த பொண்ணை நான் கல்யாணம் செய்ய நினைப்பது தவறு என்று கூறி உடனே திருமண ஏற்பாடுகளை நிறுத்தும்படி கூறினான்.
ரமேஷின் தாயும் நல்ல சம்மந்தம் கை நழுவி போய்விட்டதே என்று மனதில் நினைத்து கொண்டு… எல்லாம் உன் இஷ்டம் என்று கூறிவிட்டனர்.
உடனே இந்த கல்யாண பேச்சை நிறுத்துங்கள் என்று தனது அம்மாவை முரளி வீட்டுக்கு அனுப்பினான் ரமேஷ்.
இங்கு முரளியின் தாய், தனது அண்ணானிடம் செல்வியின் திருமணம் குறித்து பேச்சை எடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.
அப்போது ரமேஷின் அம்மா, முரளி வீட்டுக்கு வந்தார்.
என்ன அக்கா, பொண்ணு வீட்டில் கல்யாணம் பற்றி பேசினீங்களா…. என்று கேட்டாள்.
இல்ல அக்கா இன்னும் பேசலை.
ரொம் சந்தோஷம். உங்க பையன் முரளி தான் அந்த பொண்ணை கல்யாணம் பண்ண பேறேன்னு உன் பையனிடம் கூறினானாம். அந்த பொண்ணு எனக்கு வேண்டாம் என்று என் மகன் ரமேஷ் கூறிவிட்டான் என்று கூறியதும்…
முரளியின் அம்மாவுக்கு தூக்கி வாரிப்போடடது.
தன் மகனின் மனதுக்குள் இப்படி ஒரு ஆசையா? சரி அக்கா ரொம்ப சந்தோஷம் என்று ரமேஷின் தாயை அனுப்பி வைத்தார்.
பின்னர் தனது மகன் முரளியை அழைத்த அவனது தாய் முதலில் நல்ல வேலைக்கு போ . அப்புறம் உன் கல்யாணத்தை பற்றி பேசலாம் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.
முதல்முறையாக வேலைதேடிப் புறப்பட்டான் முரளி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *