சிறுகதை

ஆசையின் மறுபக்கம் – ஆவடி ரமேஷ்குமார்

” என்னை மன்னிச்சுடு சுபத்ரா” என்றான் பூவேந்திரன்.

முதல் இரவில் முதல் வார்த்தையாய் வந்ததை எதிர்பார்க்காத சுபத்ரா அர்த்தம் புரியாமல் புருவத்தை உயர்த்தினாள்.

டம்ளரோடு இருந்த பால் சொம்பை அவளிடமிருந்து வாங்கி ஸ்டூலின் மேல் வைத்தவன், சுபத்ராவின் தோள்களை தொட்டு கட்டிலில் அமர வைத்தான்.

” எதுக்கு மாமா மன்னிப்பு கேட்கிறீங்க?”

” அது வந்து… உன் அக்காவை பெண் பார்க்க வந்திட்டு உன்னை பெண் கேட்டது எப்பேர்ப்பட்ட தப்பு. உன் அக்கா மனசு என்ன பாடுபட்டு இருக்கும்.உங்க வீட்லயும்..”

” ப்ச்…இது சில இடங்கள்ல நடக்கிறது தானே…என்ன,

‘ உன் அக்காவுக்கு கல்யாணம் ஆகிற வரைக்கும் நான் காத்திருக்கிறேன்’ னு நீங்க நாகரிகமா சொன்னீங்க. ஆனா எங்க அக்காவுக்கு எதுவும் அமையல.அதனால நம்ம கல்யாணத்தை முதல்ல நடத்தும்படி ஆயிடுச்சு”

” இருந்தாலும் நான் செஞ்சது தப்பு தான்.நம்ம கல்யாணத்துல உன் அக்கா முதல் ஆளா நின்னு ஓடி ஓடி வேலை செய்யறதை பார்த்ததும் எனக்கு ரொம்ப சங்கடமாயிடுச்சு.உன் அக்காகிட்டயும் மன்னிப்பு கேட்டுட்டேன் சுபத்ரா”

” சரி விடுங்க மாமா”

சுபத்ராவின் அசாத்திய அழகை மின்னொளியில் மிகவும் அருகில் ரசித்துப்பார்த்தான் பூவேந்திரன். பின் மெல்ல அவளை அணைக்க நெருங்கினான்.

” பால் சாப்பிடுங்க மாமா” என்று சொம்பை எடுத்தாள் சுபத்ரா.

டம்ளரில் பாலை ஊற்றி நீட்டியவள்,

” நீங்களும் என்னை மன்னிக்கனும் மாமா” என்றாள்.

இப்போது அவன் முறை. அவனுக்கு விழிகள் விரிந்து கூர்மையானது. பார்வையாலேயே ‘ என்னது’ என்று கேட்டான்.

” நம்ம ரெண்டு குடும்பத்துக்கும் அதிக போக்குவரத்து இல்லேனாலும் ரொம்ப வருஷமா அறிமுகமான குடும்பம்”

” ஆமாம்”

” எங்க வீட்ல அக்கா- தங்கை; உங்க வீட்ல அண்ணன்- தம்பி”

” ஆமாம்”

” பெரியவனுக்கு பெரியவளையும் சின்னவனுக்கு சின்னவளையும் ..”

” முடிச்சுப்போட்டுடலாம்னு நம்ம பெற்றோர்கள் பேசி வச்சிருந்தார்கள். நான் தான்

அதைய குழப்பிட்டேன். இப்ப நீ என்ன சொல்ல வர்றே சுபத்ரா?”

” அவசரப்படாதீங்க மாமா. நீங்க என் அக்காவைத்தான் கட்டிக்குவீங்கனு நானும் உங்க தம்பியும் நினைச்சிட்டிருந்தோம்.ஸோ, நானும் அவரும் தான் ஜோடி சேரப்போறம்கிற எண்ணத்துல நாங்க காதலர்களா பழகி, ஒண்ணா

சொந்த பந்தங்களுக்கு தெரியாம வெளியில் சுத்திட்டிருந்தோம்”

” செய்தி புதுசா இருக்கே. உண்மையாவா?!”

” ஆமாம் மாமா.தப்பு பண்ற அளவுக்கு போயிட்டோம்.எனக்கு திடீர்னு புத்தி வந்து உங்க தம்பி கிட்ட

‘ கல்யாணத்துக்கு முன்னால

இது வேண்டாம்’ னு சொல்லி சம்மதிக்க மறுத்திட்டேன். இதனால ஏமாற்றமடைஞ்ச உங்க தம்பிக்கு என் மேல கோபம், ஆத்திரம்!

‘ என் மேல நம்பிக்கை வைக்காதவ என் வாழ்க்கையிலேயே வேண்டாம்; உன் மூஞ்சியிலேயே இனி நான் முழிக்கமாட்டேன்’ னு முகத்தில் அடிச்ச மாதிரி சொல்லிட்டு, பணம் சம்பாதிக்க துபாய் போய்ட்டாரு.

இதுல என் மேல பெரிய தப்பு ஒண்ணும் இருக்கிறதா எனக்கு தெரியல மாமா.இது நடந்து ரெண்டு மாதம் கழிச்சு

நீங்க எங்க வீட்டுக்கு வந்து ஆளை மாத்தி பெண் கேட்டீங்க.என் விசயம் தெரிஞ்ச ஒரே ஆள் என் அக்காதான். அவ தான் ஏதேதோ சொல்லி…என் அம்மா அப்பாவ சரிகட்டி சம்மதிக்க வச்சா. இருந்தாலும் நான் உங்க கிட்ட முன்னாடியே சொல்லாம மறைச்சது தப்பு தான்.என்னை மன்னிப்பீங்களா மாமா?”

தம்பி ஜெகன் எவளையோ காதலித்து அவளை இழுத்துக்கொண்டு துபாய்க்கு ஓடிப்போகும் முன் தனக்கு தெரியாமல் சுபத்ராவை காதலித்திருக்கிறான் என்கிற

விசயத்தை கேட்ட பூவேந்திரனுக்கு தலை கிறுகிறுத்தது.

சுபத்ரா மூலம் இப்போது

‘ ஆயுள் தண்டனை’ பெற்ற கைதி போல அவனின் உடலும் மனமும் கலங்க ஆரம்பித்தது.

இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்

” நான் மன்னிக்கிற அளவுக்கு

நீயொன்னும் பெரிய தப்பு பண்ணலையே சுபத்ரா.இந்த விசயத்தை இன்றோடு விட்டுருவோம்”என்று சொல்லி சமாளித்தான் பூவேந்திரன்.

அவள் விளக்கை மட்டும் அணைக்கவில்லை ; அவனையும்தான்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *