அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
வண்டலூர், செப்.6-
ஆசிரியர் பணி என்பது அறிவார்ந்த தலைமுறையை உருவாக்கும் அறப்பணியாகும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தின விழாவையொட்டி சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஆசிரியர் பணி என்பது மற்ற பணிகளை போல கிடையாது. அறிவார்ந்த தலைமுறையை உருவாக்கும் அறப்பணியாகும். கல்வியை தரும் உன்னதமான பணியைத்தான் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆசிரியர்கள் மீது எப்போதும் தி.மு.க. அரசுக்கு தனி அக்கறை உண்டு, இந்தியாவிலேயே முதன்முறையாக காலை உணவு திட்டம் தமிழ்நாட்டில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
பெண்கள் உயர்கல்வி படிப்பதற்காக புதுமைப்பெண் திட்டம் மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் நூற்றுக்கணக்கில் என்.ஐ.டி., ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படித்து வருகின்றனர்.
உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல் பயண செலவு மற்றும் முதல் ஆண்டுக்கான முழுச்செலவை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் அறிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு தனி வரலாறு உண்டு. நம்முடைய அரசு பாடத்திட்டத்தை பற்றி ஒருவர் குறை சொல்லி இருக்கிறார். அவருக்கு நம்முடைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிறந்த பதிலை கொடுத்துள்ளார்.
என்னைப் பொறுத்தவரை மாணவர்களை சுயமாக சிந்திக்கத்தூண்டும் கல்வி முறைதான் சிறந்த கல்வி முறை. அந்த வகையில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சிந்திக்க வைக்கின்ற எதையும் ஏன், எதற்கு, எப்படி என பகுத்தறிவுடன் கேள்வி கேட்கின்ற கல்வி முறை உள்ளது.
தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் படித்தவர்கள், அரசு பள்ளியில் படித்து பலர் விஞ்ஞானிகளாகவும், பலர் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஐ.டி துறையில் பெரிய பொறுப்புகளில் உள்ளனர்.
அப்படி இருக்கும்போது தமிழ்நாட்டின் கல்வி முறையை யாரும் குறை சொல்வது ஏற்க முடியாது அப்படி குறை சொன்னால் அது நம்முடைய ஆசிரியர்களையும், மாணவர்களையும் அவமதிப்பதற்கு சமம்
அதனை நம்முடைய முதலமைச்சர் என்றைக்கும் அனுமதிக்க மாட்டார். யார் என்ன சொன்னாலும் தமிழ்நாட்டில் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் பல சாதனைகளை படைக்கப் போவது உறுதி.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் சோ.மதுமதி, பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண் ராஜ், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் தொடக்க கல்வி இயக்கம் இயக்குனர் நரேஷ் நன்றி கூறினார்.