சீனாவின் உலக சாதனை முறியடித்து அசத்தல்
ஹாங்சோ, செப். 25–
19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் உள்ள லோட்டஸ் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை வண்ணமயான நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது. போட்டி தொடங்கிய சில மணி நேரத்தில் இந்தியா 3 வெள்ளி, 2 வெண்கலம் உள்ளிட்ட 5 பதக்கங்களை வென்றது.
இன்று காலை நடந்த 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய ஆண்கள் அணி சார்பில் திவ்யான்ஷிங் பன்வார், ருத்ரான்க்ஷ் பாட்டீல், பிரதாப் சிங் தோமர் ஆகியோர் பங்கேற்று 1893.7 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்திய வீரர்களின் வெற்றி புதிய சாதனையாகவும் மாறியுள்ளது.
புதிய உலக சாதனை
இதுவரை 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டிகளில் உலகா சாம்பியன்ஷிப் தொடரின் போது சீனாவின் 1893.3 புள்ளிகளே அதிக புள்ளிகள் என்ற சாதனையாக இருந்தது. அதனை இந்திய அணி வீரர்கள் 1893.7 புள்ளிகள் பெற்று சீனாவின் சாதனையை முறியடித்துள்ளனர். இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா முதல் தங்கத்தை வென்றுள்ளது. அதேபோல் இன்று காலை நடைபெற்ற ஆடவர் துடுப்பு படகு காக்லெஸ் 4 பிரிவில் இந்திய வீரர்கள் வெண்கலம் வென்றனர்.
அதே போல் துடுப்புப் படகு செலுத்துதல் போட்டியில் ஜஸ்விந்தர் சிங், பீம் சிங், புனித்குமார் மற்றும் ஆஷிஷ் ஆகியோர் வெண்பலப் பதக்கம் வென்று அசத்தினர். மேலும் மற்றொரு ஆடவர் துடுப்பு படகு பிரிவில் இந்தியா ஒரு வெண்கலம் வென்றுள்ளது. 4 பேர் கொண்ட இந்திய ஆடவர் அணி, துடுப்பு படகு பிரிவில் 6 நிமிடங்காள் 8.61 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டினர். இதன் மூலம் இந்தியா ஆடவர் அணி வெண்கலம் வென்று அசத்தியுள்ளது.
இதன்மூலம், இரண்டு நாட்களில் இந்தியா 1 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் உள்பட 9 பதக்கங்களைப் பெற்றுள்ளது.