செய்திகள்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி: சீனாவை எதிர்த்து களம் இறங்கும் இந்திய ஹாக்கி அணி

Makkal Kural Official

ஹூலுன்பியர், செப். 17–

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி சீனாவை எதிர்கொள்கிறது.

8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது.இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், சீனா, தென்கொரியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.முதல் அரையிறுதி போட்டி பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற்றது. இப்போட்டி 1–1 எனற கணக்கில் சாமானில் முடிந்தது. இதனையடுத்து வெற்றியை தீர்மானிக்க போட்டி பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு சென்றது. அதில் 2-–0 என்ற கணக்கில் சீனா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

பின்னர் நடத்த 2 ஆவது அரையிறுதி போட்டியில் தென்கொரிய அணியை இந்தியா எதிர்கொண்டது. பந்து இந்திய வீரர்களின் கட்டுப்பாட்டுக்குள் தான் இருந்தது. 13 வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் ராஜ்குமார் அடித்த பந்தை பெற்ற உத்தம் சிங், அதே வேகத்தில் கோலாக மாற்றினார். 19 வது நிமிடத்தில் இந்தியாவுக்கு ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பு கிடைத்தது. இதில் கோல் அடித்தார் கேப்டன் ஹர்மன்பிரீத்சிங். முதல் பாதியில் இந்திய அணி 2–-0 என முந்தியது. இரண்டாவது பாதி துவங்கிய 2வது நிமிடத்தில் இந்திய வீரர் சுமித், பந்தை காற்றில் துக்கி அடித்தார். நீண்ட துாரத்தில் இருந்து வந்த பந்தை பெற்ற ஜர்மன்பிரீத் சிங் (32வது), அதே வேகத்தில் அடித்து, கோலாக மாற்றினார். அடுத்த நிமிடம் தென் கொரிய வீரர் ஜிஹுன் (33வது) ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பில் கோல் அடித்தார்.

45வது நிமிடம் மீண்டும் மிரட்டியது இந்தியா. இம்முறை கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், மீண்டும் கோல் அடித்தார். இத்தொடரில் இவர் அடித்த 7வது கோல் இது. முடிவில் இந்திய அணி 4-–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. தென் கொரியா வெளியேறியது.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இன்று, இந்தியா, சீனா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கு முன் இரு அணிகள் மோதிய 23 போட்டியில் இந்தியா 17ல் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. 3ல் சீனா வெல்ல, 3 போட்டி ‘டிரா’ ஆனது. ஆசிய சாம்பியன்ஸ் தொடரில் இரு அணிகளும் 6 முறை மோதின. இதில் இந்தியா 5ல் வெற்றி பெற்றது. 1ல் சீனா வென்றது. இத்தொடரில் இரு அணிகள் மோதிய லீக் போட்டியில் இந்திய அணி 3–-0 என்று கணக்கில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடர் பைனலுக்கு இந்தியா 6வது முறையாக முன்னேறியது. இதில் 2011, 2016, 2018, 2023 என நான்கு முறை கோப்பை வென்றது. ஒருமுறை (2012) 2வது இடம் பிடித்தது. இன்று வென்றால், 5வது கோப்பை கைபற்றலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *